Showing newest 9 of 10 posts from 10/1/07 - 11/1/07. Show older posts
Showing newest 9 of 10 posts from 10/1/07 - 11/1/07. Show older posts

Wednesday, October 31, 2007

பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்

பொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் பாலகுமாரன் மேல் அந்தச் சமயத்தில் நான் வைத்திருந்த அபிரிமிதமான பற்று, என் பதின்ம வயது, பாலகுமாரனின் எழுத்து இப்படி நிறைய சொல்லலாம். சொல்லப்போனால் இந்தக் கதை படித்துவிட்டு கல்யாணம் பண்ணினால் விதவைப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று உறுதிமொழி எடுத்ததெல்லாம் உண்டு. ஆனால் பாலகுமாரனின் வெற்றி என்று அதைத்தான் சொல்வேன் வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவதைப் போல் அதை அவர் செய்வார். சொல்லப்போனால் சின்ன வயதில் இருந்த பெண்கள் பற்றிய பொறாமை உணர்ச்சியைப் போட்டு பூட்டிவைத்தவர் பாலா. அவர் பெண்களைப் பற்றி எழுதுவது அவ்வளவு இயல்பாய் வருவதாய் எனக்குத் தோன்றியிருக்கிறது.

சொல்லப்போனால் நான் இன்று வரை சிகரெட், குடி பழக்கத்தை தொடாததற்கு நிச்சயம் பாலாவை ஒரு காரணமாகச் சொல்லலாம். அந்தக் காலத்தில் எல்லாம் அப்படி ஒரு பிரமை அவர் எழுத்தின் மேல்; அழுக்கான என்னை கால்களைச் சுத்தப்படுத்துவது என்று சொல்லி தொடங்கிவைத்தது கூட அவர்தான். எங்க சிவராமன் சார் சொல்வார் இங்கிலாந்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் அவளுக்கு முன் ஆண்கள் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்று இதை மேனர்ஸாக அவர்கள் கருதுவார்கள் என்று. ஆனால் இதைப் போல் பெண்களைப் பற்றி புரியவைத்தது பாலாதான். மாற்றுக்கருத்து இல்லை.

எங்கள் வீடுகளில் பாலா பிராமணர்களை எதிர்த்து அவர்கள் செய்யும் கெட்டதையெல்லாம் எழுதுகிறார் என்பதில் தான் அவர்களுக்கு பிரியமே ஆரம்பித்தது என்று சொல்லலாம். இன்றும் உடையாரைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவர் அங்கேயும் பிராமணர்களின் தவறுகளை எழுதுறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னமோ அவர் ஆரம்பக்காலக்கட்டங்கள் ஏதோ தேவை காரணமாக தன்னை இகழந்துகொண்டதாகவும் ஆனால் பின்காலங்களின் தேவையால் தன் மீது அப்படிப்பட்ட பிம்பம் விழுவதை தடுக்கவே இப்படி பொய்யாய் சாமியார் வேஷம் கட்டுகிறாரோ என்ற சந்தேகம். அவர் ரொம்பவும் கீழ் வரைக்கும் போனதை எழுதியதால் மீண்டும் அதைச் சரிசெய்யும் சமயத்தில் சாதாரணமாக இருப்பதைக் காட்டமுடியாமல்; அதற்கும் மேல்நிலை என்ற ஒன்றை அவர் வலிந்து அவர் மேல் திணித்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

பல சமயங்களில் அவருடைய கதைகளை மீளப்படிக்கும் பொழுது அவர் தான் மணந்த இருதாரத்தை Defend செய்வதற்காகத்தான் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுகிறாரோ என்று கூட படும் எனக்கு. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. எனக்கு காரணம் தெரியாது; ஒருவேளை ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் இருதார மணம் என்பது கொள்கை அளவில் கூட பெண்களுக்கு பிடித்தமானதாக இல்லாததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பறந்துவிட்டது பதிவு. பயணிகள் கவனிக்கவும் அவருடைய இந்த எந்தவிதமான சமரசத்திற்கும் உள்ளாகாத எழுத்து என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் காலத்தில் ஆண் ஒருவன் வாசக்டமி செய்துகொள்வதாகச் சொல்லி முடித்தது பெண்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றோ இல்லை அதை ஒத்ததற்கான ஸ்டன்ட்டோ என்று படுகிறது எனக்கு.

நாவல்கள் எழுதுவதில் இருக்கும் டெம்ப்ளேட் முதலில் எனக்கு பிடிபடவில்லை; ஆனால் இப்பொழுது அவருடைய எந்த நாவலை எடுத்தாலும் முதலில் தென்படுவது அவருடைய டெம்ப்ளேட் தான். ஆனந்தவிகடனில் இந்தக் கதை தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில் ஸ்டீபன் என்றொரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அதை ஹீரோ போல் கொண்டுசென்றிருப்பார். ஆனால் சட்டென்று சத்தியநாராயணன் அறிமுகம் ஆனதும் ஸ்டீபன் கதையில் இருந்து மறைந்துவிடுவார். இது எதனால் அப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. ஒருவேளை ஒருவரை மையமாக வைத்து கதை சொல்லும் வழக்கத்தை பாலகுமாரன் கழற்றி எறிய முயன்றிருக்கவேண்டும். எனக்கென்னமோ அந்த நாவல் சத்தியநாரயணா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதும் தான் சூடுபிடிப்பதாகப்படுகிறது.

அதே போல் நாவலின் background எப்பொழுதும் பாலகுமாரன் கதைகளில் மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு விவரம் சேகரிப்பார் என்று நினைக்கிறேன். இது Sidney Sheltonன் அணுகுமுறை எனக்கு பாலகுமாரன் நாவல்களைத் தொடர்ந்து படித்துவிட்டு சட்டென்று சிட்னியின் நாவல் படிக்க முதலில் பட்டது இதுதான். Sidneyன் த மாஸ்டர் ஆப் த கேமை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், அதில் சிட்னி ஷெல்டன் மொத்தம் ஐந்து தலைமுறையை அலேக்காக வைரத்தில் வைத்து கொடுத்திருப்பார். அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றும் இதில் பாலகுமாரன் விமானநிலையத்தை மையமாக வைத்து நாவல் அமைத்திருப்பார்.

அந்த விமானநிலையத்தைப் பற்றிய விவரிப்புக்கள் கொஞ்சம் போல் ஒட்டாமல் இருப்பதாக எனக்கு இப்பொழுது படுகிறது. ஆனால் சட்டென்று விரியும் கதையில் எங்கேயும் பாலகுமாரன் சட்னியில் அரைபடாமல் தெரியும் பொட்டுக்கடலை போல் தெரியமாட்டார் என்பது தான் விசேஷம். கவனிக்கவும் இது அவருடைய மற்ற கதைகளுடனான ஒப்பீடே, எனக்கு என்னவோ இரும்புக் குதிரைகளைவிடவும் மெர்குரிப் பூக்களை விடவும் பயணிகள் கவனிக்கவும் பிடித்திருந்தது.

எனக்கென்னமோ பாலகுமாரன் தமிழ் சினிமாக்கள் சாதிக்காததை அந்த நாவலில் சாதித்திருப்பதாக தோன்றும்; எப்படியென்றால் ஒரு கன்னிகழியாத ஆண்(சொல்லகூடாதோ!) திருமணம் நடந்து பிள்ளை பிறந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்டியிருப்பார். பெரும்பாலான சமயங்களில் அந்தப் பையன் ஏற்கனவே கழிந்தவனாகவேயிருப்பான். இல்லை ஏதாவது கதை சொல்லி அந்தப் பெண் கன்னிகழியாதாவள் என்றொன்றைக் கொண்டு வருவார்கள். நான் மோகமுள் எல்லாம் படித்தது பிறகுதான்.

சரி கதைக்கு வருவோம், ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் விமானநிலையத்தில் பணி செய்பவர்கள். ஜார்ஜினா ஒரு குழந்தையுடன் வசிக்கும் இளம் விதவை. ஜார்ஜினாவின் கணவன் வின்சென்ட் விமானநிலையத்தில் வேலைசெய்து பணியில் இருக்கும் பொழுது நடைபெறும் குண்டுவெடிப்பால் இறந்துவிட ஜார்ஜினாவிற்கு அந்த உத்யோகம் கிடைக்கிறது. சத்தியநாராயணாவும் வின்சென்ட்டும் நண்பர்கள் சத்தியநாராயணன் வின்சென் ட்டின் மரணத்திற்கே தான் தான் காரணம் என்று நினைக்கிறான் - (ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளக்கூடிய விளக்கமாக எனக்குப்பட்ட இடம் இது) - அதனால் அவனால் ஜார்ஜினாவை வின்சென்ட் இறந்த பிறகு பார்க்கும் பொழுதெல்லாம் மனக்குழப்பம் உருவாகிறது. பின்னர் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எதிர்பாராதவிதமாக காதலில் விழுவதும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யும் பொழுது வரும் பிரச்சனையும் அதை எப்படித் தீர்த்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள் என்பதும் தான் கதை. சொல்லப்போனால் கதையை அப்படியே ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கலாம் தான். ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் சூப்பராயிருக்கும். இதில் எனக்கு மிகவும் பிடித்தது ஜார்ஜினாவும் சத்திநாராயணாவும் காதலில் விழும் பொழுது நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள். உரைநடை ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கும் சிரித்துக்கொண்டே படிக்கலாம். இந்த உரையாடல் என்னைப் பித்துபிடித்து அலையச் செய்தது என்றால் அது மிகையல்ல. எத்தனை தடவைகள் அந்த உரையாடல்களைப் படித்திருப்பேன் என்று நினைவில் இல்லை. என்னுடைய ஆரம்பகால கதைகளில்(குறிப்பாக - ஒரு காதல் கதை) பாலாவின் உரையாடல் தாக்கம் இருப்பதாக நான் நினைத்திருக்கிறேன் அதுவும் பயணிகள் கவனிக்கவுமின் தாக்கம். நான் டெல்லியில் இருந்த சமயங்களில் உருப்போட்டுக்கொண்டிருந்த உரையாடல்கள் எழுத்தில் பார்க்க ஒன்றரை ஆண்டு ஆயிற்று. அப்படி எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் பயணிகள் கவனிக்கவுமில் பாலா எழுதியவை.

அதேபோல் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எழுதிக்கொள்ளும் கவிதை இரண்டு. பாலா சொல்லியிருப்பார் வார்த்தையைக் கோர்த்து கோர்த்து கவிதை எழுதணும் தனக்கு ஃப்ரீ ஃபோலோவா எழுதினாத்தான் பிடிக்கும் அதனால் தான் கவிதையை விட்டுட்டு நாவல் எழுத வந்ததா! ஆனால் சிறுகதையும் நாவலுமே கூட இப்ப வார்த்தை வார்த்தையா கோர்த்துத்தான் எழுதணும்னு வந்ததால பெட்டர் வார்த்தைகளை கவிதைக்காகவே கோர்த்துப்போம்னு தான் இப்பல்லாம் கொஞ்சம் தீவிரமா கவிதை எழுதுறது. இந்தக் கவிதை அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்திருந்த கவிதைகள் வரிசையில் நிச்சயம் இருந்த ஒன்று. ஆனால் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்தால் இதைப்போன்ற ஒன்றை நானே எழுதிவிடுவேன்னு நினைப்பதால் அதற்கான பாலாவின் தேவையைப்பற்றிய கேள்விகள் எழுகிறது.

எதிர்பாராதவிதமாக சத்தியநாராயணா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவனுக்காக ப்ரார்த்தனை செய்யவரும் ஜார்ஜினாவை - சத்தி இயலாமையால் திட்டிவிட்டு எழுதுவதாய் இருக்கும் இந்தக் கவிதை.

என் மனசுக்குள்ளே சில நாய்கள்
புரண்டு கிடக்கும் எனைத் தின்று
என்றோ மூடிய மனக்கதவை
எவரும் திறக்க வரவேண்டாம்
திறக்க நினைக்கும் ஒற்றைகை
ஓசை கேட்டு அவை நிமிரும்
நெருங்க காலடி சத்தத்தில்
நிமிர்ந்து ரத்தப் பல் காட்டும்
என்னைத் தின்ற வெறி நாய்கள்
உங்களைத் துரத்த ஓடிவரும்
நானே கதவைத் திறந்தாலும்
நாய்கள் மடக்கும் வருபவரை
விதியெனும் கிழவன் எனக்குள்ளே
தள்ளிய நாய்களில் நானில்லை
நாய்கள் எந்தன் தலைமேலே
நானோ நாய்களின் காலின் கீழ்
ஒன்றாய் பெருகுது மனத்தீவில்
என்னைத் தின்று கண்மூடி
புரண்டு கிடக்குது என்னுள்ளே
நான் யாரிடம் பேச முயன்றாலும்
இந்நாய்களின் ஊளைத் தடுக்கிறது
என்னுள் விழுந்த இந்நாய்கள்
நான் சாகும் நேரம் தூங்கிவிடும்
அந்தக் கணத்தில் கைகுவித்து
கண்வழி கேட்பேன் மன்னிப்பை
நீர் இருக்கும் இடத்தின் திசை நோக்கி
நானே நானாய் கிடந்தபடி

சத்தி எழுதிய கவிதைக்கு பதிலாய் இதை ஜார்ஜினா எழுதுவாள்.

வெள்ளை அங்கி சுருள் தாடி
ஒரு யூதன் வந்தான் இவ்வுலகில்
வெளிச்சம் முகுந்த வானத்தின்
ஒளியைத் தேக்கி தன் முகத்தில்
மெள்ள நுழைந்தான் பூவுலகில்
கன்னி மேரியின் சிசுவாக,
உலகம் முழுவதும் பல நாய்கள்
மறித்துக் கேட்டன அவனெதிரே,
எதற்கு வந்தீர் இவ்விடத்தில்
என்ன வேலை மானுடத்தில்
மெள்ள சிரித்து யூதமகன்
கரத்தை நீட்ட அவை விலகும்
மனிதன் எங்கள் முழுப்படைப்பு
மக்கள் எங்கள் குழந்தைகள்
உருவம் அற்ற ஒளிப்பிழம்பாய்
இருக்கும் எங்கள் தேவபிதா
உருக்கிச் செய்த மானுடத்தை
நீங்கள் ஆளவிடமாட்டேன்
உலகம் என்னும் ஆலயத்தில்
ஒவ்வொரு மனிதரும் தீபங்கள்
உருட்டிக் கவிழ்க்க நீர் முயன்றால்
உங்களைச் சும்மா விடமாட்டேன்
உரத்துக் கத்தின அந்நாய்கள்
பயந்து நடுங்கின தீபங்கள்
நாய்களை உறுத்து பார்த்தபடி
மெள்ளத் திறந்தான் ஆலயத்தை
இடுப்புக் கயிற்றை அவிழ்த்தெடுத்து
சொடுக்கிப் போட்டான் புவியதிர
ஓடிப்போச்சு நாயெல்லாம்
தீபங்கள் எல்லாம் மகிழ்ந்தாட
ஒற்றைத் தீபம் தலை வணங்கி
யூதனை நோக்கி வினவியது
என்னைப் படைத்த கடவுள்தான்
நாயைப் படைத்தான் இவ்வுலகில்
எதிரெதிர் விஷயம் படைத்துவிட்டு
எதற்கு வந்தீர் விளையாட
துக்கத்தோடு புலம்பியதை
குனிந்து பார்த்தான் கனிவாக
மெள்ளத் திரியைத் தூண்டிவிட்டு
யூதன் சொன்னான் பொதுவாக
நாய்கள் குரைக்கா திருந்திருப்பின்
எம்மை விரும்பி அழப்பீரோ
இருளே இங்கு இல்லையெனில்
உமக்கு ஏதும் மதிப்புண்டோ
விருப்பம் என்பது முதல்கேள்வி
புரியாதிருப்பின் கேளுங்கள்
கேட்டவர்தானே வரம் பெறுவர்
தீபங்கள் வணங்கின தலை குனிந்து
ஏசு ஏசு என்றபடி என்னுள் கேட்டதை நான்
சொன்னேன்
நீயும் கேளேன் என் தோழா

ஆனால் எனக்கு பாலாவின் சத்தி வாஸக்டமி கடைசியில் செய்துகொள்வதாகச் சொல்லும் முடிவு பிடிக்கவில்லை எத்தனையோ முறை இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்குமோ என்று யோசித்துப்பார்த்திருக்கிறேன் விடை தெரியவில்லை. ஆனால் இப்படி மறுமணம் செய்துகொள்பவர்களுக்கு வாஸக்டமி நிச்சயமான தீர்வாய் இருக்கமுடியாதுதான். ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த பாலகுமாரனின் நாவல்களில் இது முக்கியமானது.

பிங்குஸ்தான்

Tuesday, October 30, 2007

பிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள்

இதுதான் நான் படித்த முதல் பிரமிளின் கவிதையாகயிருக்கும். இந்தக் கவிதை ஏற்படுத்திய நெருக்கம் பிரமிளைத் தேடத் தொடங்கினேன். அந்தச் சமயம் பிகே சிவக்குமார் எழுதியிருந்த சுந்தர ராமசாமியின் சவால் கவிதை இடுகையும்,

"ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்."

என்ற கவிதை வரிகளும் "சுந்தர ராமசாமியின் சவால் என்ற இந்தக் கவிதை பிரமிளுக்குப் பதிலாக எழுதப்பட்டது என்று ந. முத்துசாமி சுந்தர ராமசாமி அஞ்சலிக் குறிப்பொன்றில் எழுதியிருந்தார். பிரமிளுக்கும் சுந்தர ராமசாமிக்குமான சண்டை தமிழ் இலக்கிய உலகில் பரிச்சயம் உடையவர் அறிந்தது." பிகேஎஸ்ஸின் இந்த வரிகளும் என்னை வெகுவிரைவாக சுந்தர ராமசாமி - பிரமிள் - இலக்கிய சர்ச்சையை நோக்கி இழுத்தது.

இடையில் ஜெயமோகன், "...ஆயினும் சுந்தர ராமசாமி தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று. அவரது பிற்காலச் சிறு சரிவுகளில் பெரும்பாலானவை தன் குழந்தைகள்மீது தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பெரும்பாசம் கொண்ட இந்தியத்தந்தை அவர் என்பதிலிருந்து முளைத்தவையே. ஒரு கோணத்தில் அவையும் அவரது மகத்துவத்தின் அடையாளங்களேயாகும்..." மரத்தடியில் எழுதியதைப் படித்திருந்தேன் - இதை ஜெ.மோ எழுதிய பொழுது சு.ரா உயிருடன் இருந்தாரா எனக்குத் தெரியாது ஆனால் நான் படிக்கும் பொழுது அவர் இல்லை. மேலும் ஜெ.மோ நினைவின் நதியில் என்ற சுந்தர ராமசாமியின் நினைவுகளைப் பற்றி எழுதியிருந்த சமயம். பெரிய உரையாடல் - கருத்துப் பரிமாற்றம் அந்தப் புத்தகத்தைப் பற்றி நடந்துகொண்டிருந்தது.

நான் கேள்விப்பட்டிருந்தது ஜெயமோகனுக்கும் சுராவிற்கு என்னமோ பிரச்சனை என்றும் பணம் பண்ணுவதற்காக உயிர்மையும் ஜெ.மோகனும் சு.ராவின் மரணத்தின் தாக்கம் குறைவதற்குள்ளேயே புத்தகத்தை வெளியிட்டுவிட்டதாகவும். மனுஷ்யபுத்திரனுக்கும் காலச்சுவட்டிற்கும் காண்டு என்று இதற்கு முன்னமே கூட படித்திருந்தேன். ஜெயமோகனின் "தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று" வரிகள் மற்றும் மேற்சொன்னவையெல்லாம் சேர்த்து என்னை இதைப்பற்றி நிறைய படிக்கவைத்தது.

இதற்குப்பின் நேரடியாக புத்தகத்தில் இருந்து படிக்காமல் இணைய நண்பர்கள் கிடைக்கும் தகவல்கள் என்று பிரமிள் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியும் படித்துக்கொண்டுதான் இருந்தேன். சமீபத்தில் நடந்த பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் நினைவின் நதியில் புத்தகமும் சுந்தர ராமசாமியின் "நினைவோடை - பிரமிள்" புத்தகமும் வாங்கினேன். இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கியிருந்தாலும் முதலில் எடுத்தது பிரமிள் நினைவோடை - சுந்தர ராமசாமிதான்.

சொல்லப்போனால் இந்தப் பதிவை - நினைவோடை பிரமிள் - சுந்தர ராமசாமியின் புத்தக விமர்சனமாக பார்க்கலாம் தான்; பிரமீளைப் பற்றி நிறையப் படிக்காததாலும் புத்தகம் சுந்தர ராமசாமியினுடையது என்பதாலும் ஒருபக்கச் சார்பு வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்.



"பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுகளாலும் அந்தக் கவர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிட்டன. அந்த வலியையும், அதன் பின்னான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின்போது மௌனம் காத்ததற்கான காரணங்களையும் சமன்நிலை குலையாத நிதானத்துடன் இந்நூலில் சுந்தர ராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்."

- புத்தகத்தின் பின்பக்க வரிகள்.

இந்தப் புத்தகத்தை முதலில் படித்து முடித்ததும் இப்படிப்பட்ட விஷயத்தையும் சுவாரசியமாக எழுத முடியுமா என்ற எண்ணம் தான் முதலில் எழுந்தது. இதைத் தொடர்ந்து படித்தனாலோ என்னமோ நினைவின் நதியில் பற்றி எனக்கிருந்த சில எண்ணங்கள் இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை இது இலக்கியச் சண்டையைப் பற்றியதாக இருந்ததாலும் இதைப் பற்றி வெகுகாலமாக நான் தனிப்பட்ட முறையில் தேடிக்கொண்டிருந்ததாலும் சுவாரசியமாகப் பட்டதா தெரியவில்லை. முன்னமே கூட ரமேஷ் - பிரேம்ன் பேச்சும் - மறுபேச்சுமில் வந்த உரையாடல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது.

இந்தப் புத்தகத்தில் சுந்தர ராமசாமி, பிரமிளை சந்திப்பதற்கு முன்பு, அவரைச் சந்தித்து உரையாடி இரண்டு ஆண்டு ஒன்றாய் இருந்தது பின்னர் அவருடனான கருத்து வேறுபாட்டின் பொழுதான காலங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

"சிவராமூ எழுத்துவில் எழுதியிருந்த எஸ்.பொவின் 'தீ' பற்றிய கடிதம் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அது ஒரு விளாசல் கடிதம். விளாசல்கள் மீது எனக்கும் நம்பிக்கும் அந்த வயதில் ரொம்பக் கவர்ச்சி இருந்தது எல்லாவற்றையும் நொறுக்கி எறியவேண்டும்! அந்த ஆவேசம் தான் மனதிற்குள். ஆவேசம் ஏற்படும்போது சந்தோஷமாக இருந்தாலும் பின்னால் தனியாக நான் யோசிக்கும்போது குறையாக இருந்தது. 'தீ' என்ற நாவலை நான் அப்போது படித்ததில்லை..." இப்படித்தான் சு.ரா. பிரமிளைப் பற்றிய தன்னுடைய நினைவோடையைத் துவங்குகிறார்.

பிரமிளுக்கு எண்கணிதத்தின் மீது நம்பிக்கையிருந்ததால் அவருடைய பெயர் அவ்வப்பொழுது மாறுபட்டுக் கொண்டே வந்திருக்கிறது. தருமூ அரூப் சிவராமூ என்பது தான் அவருடைய பெயர், அவர் இதை பெரும்பான்மையான சமயங்களில் வெவ்வேறான ஸ்பெல்லிங்கில் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். ஏன் சட்டென்று எண் கணிதத்தில் நுழைந்தேன் என்றால் இதில் ஒரு பெரிய மேட்டர் உண்டு; வருகிறேன்.

சின்ன ப்ளாஷ்பேக் உடன், அதாவது பிரமிள் சுந்தர ராமசாமியுடன் தங்கியிருந்த பொழுதுகளில் அவருடைய பணத்தை சு.ராவிடம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார். அதைப் பற்றி சு.ராவின் வார்த்தைகளில்...

"...நான் கடைக் கணக்குப் புத்தகத்தில் அவருக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி அதில் அந்தத் தொகையைக் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு நாள் அந்தப் பேரேட்டைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். கணக்குகளைச் சரிபார்க்க அல்ல. அன்று காலையில் அவர் தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்ட்டிருக்கிறார். பழைய பெயரை மாற்றிவிட்டுப் புதிய பெயரில் கணக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். நான் 'ஒரு தடவை என்றால் செய்யலாம். நீங்கள் வாரத்திற்கு ஒரு பெயரை வைத்துக் கொள்கிறீர்கள். நண்பர்களுக்கு எழுதும் போது, பிறக் பத்திரிகைகளுக்கு எழுதும்போது வேண்டுமானால் அந்தப் புதிய பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்றேன். அதற்கு அவர், 'அப்படியில்லை. எனக்கு ஒரு பெயரை மாற்றுவதானால் என் சம்மந்தப்பட்ட எல்லாப் பதிவேடுகளிலும் அதை மாற்றிவிட வேண்டும்' என்று சொன்னார்..."

அதைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்லும் முன்னால், பெயரிலியின் இந்தப் பதிவு நினைவில் வந்தது. இதுவும் சொல்லப்போனால் பிரமிளின் இந்த பெயர் மாற்றும் வழக்கத்தை நையாண்டி செய்து வந்ததுதான்.

ஏன் நான் பிரமிளின் இந்த எண்கணித ஆர்வத்தை முதலில் எடுத்தேன் என்றால், பிற்பாடு சுராவுக்கும் பிரமிளுக்கும் பிரச்சனை வந்த பிறகு பிரமிள் சுராவின் மீது வைத்த கடுமையான குற்றச்சாட்டில் ஒன்று சுரா தனக்கு பணம் பாக்கி தரவேண்டும் என்பது, இதில் எண்கணிதம் எங்கே வந்தது என்றால்; எண்கணித முறைப்படி சுராவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பெயர் மாற்றம் செய்து தந்ததற்காகத்தான் அந்தப் பணம் கொடுக்க வேண்டும் என்று பிரமிள் சொன்னதுதான் அது. சு.ராவின் வார்த்தைகளில்,

"...ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம் தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று பில் அனுப்பியிருந்தார். நான் அதற்குப் பதில் போடவேயில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்லி அவர் பார்க்கவில்லை என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும் இருந்தாலும் அப்படி எழுதினார்..."

இதே போன்ற கடிதத்தை பிரமிள் சுராவையும் பிரமிளையும் தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பியிருந்திருக்கிறார். சுரா பணம் தரவேண்டிய பாக்கி இருக்கிறது என்று சொல்லி...

"...அவருடன் தங்கியிருந்தபோது அவர் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் அதோடு அவருக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அவரிடம் போய் இப்படிக் கேட்பது சரியல்ல என்று எனக்குத் தெரிந்து ஒருவர்கூட எழுதியிருக்கவில்லை. ஆனால் பணத்தைக் கொடுத்துவிடும்படி பல எனக்குக் கடிதம் போட்டார்கள். தமிழ்ச் சூழல் மோசமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு உறுதிப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அந்தக் காரியத்தைச் செய்துவந்தார். என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் ராமசாமி பணம் தராததுதான் காரணம் என்று பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் சொன்னார். ஒரு நாள் கூட நானோ நம்பியோ அவருக்குச் செய்த நல்ல காரியங்களில் ஒன்றைக்கூட யாரிடமும் சொன்னது கிடையாது. நாங்கள் அவரைக் கவனித்துக்கொண்ட நாட்களில் சின்னச்சின்ன குறைகள், தவறுகள் நடந்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. முழுத்தவறும் அவர் பக்கம்தான் இருக்கிறது; எங்கள் பக்கம் தவறே இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு மனித உறவில் அடிப்படையாகச் சில விஷயங்கள் இருக்குமே அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர் செய்துவந்தது குறித்து எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது..."

சுராவுக்கும் பிரமிளுக்குமான பிரச்சனை நடந்துகொண்டிருந்த பொழுது சுரா அதைப்பற்றி வாயையே திறக்கவில்லை. இன்றும் கூட மக்கள் சுராவின் மோனநிலை என்று நக்கல் செய்வதைப் பார்க்கமுடியும். அதற்கான விளக்கம் கூட இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.

"...அவர் பலரைப் பற்றித் திட்டி நிறைய எழுதியிருக்கிறார். செல்லப்பா பற்றி, சாமிநாதன் பற்றி, ஞானக்கூத்தன் பற்றி, என்னைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். நானொரு முடிவு செய்திருந்தேன். அவர் என்ன சொன்னாலும் நாம் அதற்குப் பதில் எழுதக்கூடாது என்று. அதற்கான சக்தி எனக்குக் கிடையாது. நான் ஏதாவது பதில் எழுதினால் அதை வைத்துக்கொண்டு இன்னும் பல அஸ்திரங்களை அவர் பிரயோகிக்க ஆரம்பிப்பார். எனக்கு மட்டும் புரியும்படியாகச் சில விஷயங்களைச் செய்வார். அதன் பின் எல்லோருக்கும் புரியும்படியாக ஒன்றைச் செய்வார். 'அவர் ரொம்பவும் அழுகியவர், அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள்' என்று சொல்ல ஆரம்பிப்பார். எனவே நான் அவற்றைத் தவிர்க்க விரும்பினேன். அவர் இந்தியாவுக்கு வந்து தங்கி அவர் கடைசியில் மறையும் வரை அவரைப்பற்றி ஒரே ஒரு நெகட்டிவ்வான வாக்கியம்தான் நான் எழுதியிருக்கிறேன். யாத்ராவில் வெங்கட் சாமிநாதனைப் பற்றிச் சொல்லும் போது ஒரு இடத்தில் குழந்தைகளைக் கள்ளம் கபடமற்றவர்களாகச் சித்தரிப்பது பற்றி எழுதியிருந்தேன். அதில் குழந்தைகள் கள்ளம் கபடமற்றவர்கள் என்று சொல்வதானால் யாத்ரா இதழை எடிட் செய்யும் பொறுப்பை என் குழந்தை தங்குவிடம் தந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு சிவராமூவைப் பற்றி அதில் இணைத்துப் பேசியிருந்தேன். அந்த வாக்கியத்தைக் கிட்டத்தட்ட இருநூறு பேரிடமிடமாவது சிவராமூ சொல்லிக் காட்டியிருப்பார். ஏதோ நான் கத்தியால் குத்தியதுபோல் அதை ஆக்கிவிட்டார். அவர் சொல்வதைக் கேட்கும் பலருக்கும் நான் சொன்னது தவறு என்றுதான் பட்டிருக்கும். நான் அவர் சொன்ன விஷயங்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. ஜெயமோகன் என்னுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் அவருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்..."

நகுலனைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பேசுகிறார் சு.ரா.

"...நகுலனுடைய படைப்புக்கள் சிவராமூவின் உலகத்தோடு நெருக்கமுடையவையாகத்தான் எனக்குத் தோன்றியது. அவர்கள் இருவருக்குமே பொதுவான பார்வை, அக்கறைகள் இருப்பது போலாத்தான் எனக்குப் படுகிறது. என்ன காரணத்தினாலோ சிவராமூவுக்கு நகுலனின் கவிதைகள் பேரிலும் சரி, கதைகளின் பேரிலும் சரி நல்ல அபிப்ராயம் இருந்திருக்கவேயில்லை. நகுலனுக்கு சிவராமூ பேரில் ஆர்வம் இருந்தது..."

நகுலன், பிரமிளைச் சந்திக்க விருப்பமுடன் இருந்ததாக சு.ரா. சொல்கிறார் அப்படி ஒரு சமயம் பிரமிள் சு.ராவின் வீட்டில் தங்கியிருந்த சமயம் நகுலன் பிரமிளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். சுராவும் பிரமிளின் பெயரில் உரிமையெடுத்து அவரை பார்க்க வரச்சொல்லி நகுலனுக்கு கடிதம் அனுப்ப பிரமிளுக்கு கோபம் வந்திருக்கிறது.

"...'நீங்கள் எப்படி என்னைக் கேட்காமல் எழுதிப் போடலாம்' என்று கேட்டார் அவர் வந்து உங்களைப்ப் பார்த்துவிட்டுப் போகப்போகிறார் அவ்வளவுதானே என்று சொன்னேன். 'அவரைப் பார்க்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது நான் தானே தவிர நீங்கள் அல்ல. நீங்கள் அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள், சிவராமூவுக்கு உங்களைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை என்று எழுதிப்போடுங்கள்' என்றார் நான் சொன்னேன், 'வேண்டாம். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். நான் உங்களைக் கேட்காமல் எழுதிப் போட்டது தவறுதான். அந்த உரிமையை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எழுதிப்போட்டுவிட்டேன். அவர் வரட்டும். நீங்கள் ஒரு அரைமணிநேரம்ம் இருந்து பேசிவிட்டுப் போங்கள். வரவேண்டாம் என்று சொல்லிக் கடிதம் எழுத என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொன்னேன்'...

நகுலன் ரொம்பவும் பிரயாசைப்பட்டு, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார். ஆனால் பிரமிள் அந்த முறை நகுலனைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டாராம். இதனால் நகுலனுக்கு சுராவின் பெயரில் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர்தான் ஏதோ விளையாடுகிறார் என்று. இப்படியே விரிகிறது இந்தப் புத்தகம் வெங்கட் சாமிநாதனுக்கும் பிரமிளுக்குமான உறவைப் பற்றிக் கூட இந்தப் புத்தகம் பேசுகிறது.

பிரமிளைப் பற்றிய வேறு சில நல்ல விஷயங்களையும் பேசுகிறது.

"...ஒருதடவை அவர் டெல்லியில் இருந்தபோது க.நா.சுவைப் பேட்டி கண்டு எழுதியிருந்தார். அந்தப் பேட்டியை அருமையக எடுத்திருந்தார். அந்தப் பிரதியை என்னிடம் தந்து வைத்திருந்தார். நான் எங்கேயோ கை தவறி வைத்துவிட்டேன். சில காலம் கழித்து அவர் அந்தப் பேட்டியைத் தாருங்கள் என்று கேட்டபோது, இரண்டு நாட்களில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு எப்போதெல்லாம் ஓய்வு கிடைத்தததோ அப்போதெல்லாம் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. அந்தக் கட்டுரையை நான் ஒளித்து வைத்துக் கொண்டிருப்பதாக அவர் சொல்லலாம்; அல்லது கிழித்துப் போட்டுவிட்டதாகச் சொல்லலாம்; அது வெளிவரவிடாமல் தடுக்க முயல்வதாகச் சொல்லலாம் என்று எனக்குள் பயம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவரிடம் தயங்கியபடி, தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. கிடைத்ததும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். 'கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. விட்டுவிடுங்கள் என்று சொன்னார். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. நானாக இருந்தால் 'எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருந்தேன், இப்படிக் கவனக் குறைவாக இருந்துவிட்டீர்களே' என்று கேட்டிருக்கத்தான் செய்திருப்பேன். ஆனால் அவர் பெருந்தன்மையோடு விட்டுவிட்டார். அந்தக் கட்டுரை அதன் பின் கிடைக்கவேயில்லை. நிச்சயமாக அது ஒரு இழப்புதான். அவரும் க.நா.சுவை அதன் பின் பேட்டி கண்டு எதுவும் வெளிவிட்டிருக்கவும் இல்லை. நான் என் கைவசம் இருக்கும் பொருட்களைப் பத்து பதினைந்து வருடங்களுக்கு ஒரு தடவை அலசிப் பார்த்து வேண்டாதவற்றை எரிப்பது வழக்கம். அப்படி எத்தனையோ தடவை தேடிப் பார்த்தபோதும் அந்தக் கட்டுரை எனக்குக் கிடைக்கவேயில்லை.

அவர் என்னிடம் கொடுத்த ஆங்கில நாவலை அவரிடம் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்த ஞாபகம் இருக்கிறது. அந்த நாவலை நான் படுத்துப்படித்துப் பார்த்தபோது ஆபாசமான விஷயங்களைப் பேசுவதிலிருந்துதான் அந்த நாவலே ஆரம்பமானது. அப்போது அந்த விதமான நாவல்களைப் படித்த அனுபவம் இருந்திருக்கவில்லை. ஹென்றி மில்லர் போன்றோரின் படைப்புகளை எல்லாம் அதன் பின் தான் படித்தேன். மேற்கத்திய படைப்பாளிகள் பலர் ஆபாசத்திலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து உயர்ந்த ஒரு தளத்திற்கு நகர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழில் பெரும்பாலும் அப்படியான ஒன்று நடக்கவில்லை. வெறும் ஆபாசத்தைத் தூண்டுவது என்பதாகவே அது முடிந்திருக்கும். சிவராமூவின்ன் அந்த நாவல் அப்படியான வேறொரு தளத்திற்கு நகர்ந்ததா என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் அந்த நாவலை முழுவதுமாகப் படிக்க முடிந்திருக்கவில்லை..."

இப்படி அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் நிறையவற்றை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்தான்.

"அதிகம் அவரைப் பற்றி எதிர்மறையான அனுபவங்களைப் பற்றி மட்டுமே சொன்னதுபோல் தெரிகிறது. அவருடனான உறவில் இருந்த சாதகமான அம்சங்கள் ஏதாவது சொல்லமுடியாமா?" என்ற கேள்விக்கு

"நான் திட்டமிட்டு அவர் மீதான எதிர்மறையான விஷயங்களைச் சொல்லவில்லை. அவருடனான என் உறவு அப்படியான சம்பவங்களால்தான் நிறைந்திருக்கிறது. இது ஏதோ என் அனுபவம் மட்டுமல்ல. பெரும்பாலோனோருக்கு அப்படியான அனுபவங்கள் தான் இருந்திருக்கின்றன. அளவுகள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். வெங்கட் சாமிநாதன் பேரிலும் சிவராமூவுக்கு ஏகதேசம் இதே அளவு வெறுப்பு இருந்தது. நாங்கள் இருவர் மட்டும்தான் அவரை நம்பி ஏமாந்திருந்தோம். மற்றவர்களுக்கு அப்படியான ஒரு நிலை இருந்திருக்கவில்லை. மற்றவர்கள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள், அதில் முறிவு ஏற்பட்டிருக்கிறது அவ்வளவு தான். நாங்கள் இருவர்தான் சிவராமூவை நாம் பாதுகாத்து வரவேண்டும் என்று தீர்மானித்து அதற்கான செயல்களைச் செய்தும் வந்தோம். அவர் மீது மிகுந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. எனவே ஏமாற்றமும் வருத்தமும் எங்களுக்கு அதிகமாக இருந்தது..." என்று பதில் சொல்கிறார் சு.ரா.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய overall opinion ஆக இதையே சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் இருந்து நான் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதிகள் என்னுடைய விருப்பு வெறுப்பு காரணமாக அமைந்தது என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனாலும் புத்தகத்தைப் பற்றியோ சு.ரா. & பிரமிளைப் பற்றியோ தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள விரும்புபவர்கள் புத்தகத்தை வாங்கி முழுவதுமாகப் படிக்க வேண்டுகிறேன். வெட்டி ஒட்டும் பகுதிகள் பல சமயங்கள் தவறான பொருளைக் கொண்டுவந்துவிட்டுவிடும் என்பதால் இந்த டிஸ்கி.

பிரமிளின் கவிதை ஆளுமை பற்றி பெரிய அளவில் இந்த புத்தகம் விவரிக்கவில்லை, ஆனால் அங்கங்கே பிரமிளின் திறமையைப் பற்றி சுரா சொல்லி வந்திருக்கிறார் தான். பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான உறவைப் பற்றியதாகவே பிரமிளின் கவிதைகள் இருந்திருக்கின்றன என்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பிரமிளின் திறமையில் கவரப்பட்டவராகவே சு.ரா இருந்திருக்கிறார். ஆனால் அவருடனான நேரடிப்பழக்கம் அந்தத் திறமையை கருத்தில் கொள்ள முடியாத அளவிற்குச் செய்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

இன்னும் கொஞ்சம் பதிவுகள் பிரமிளைப் பற்றி...

ரோசா வசந்தின்
மொழியின் தீராத பக்கங்களில் கவிதையின் வாழ்வை எழுதிச் சென்ற பிரமீள்.
அறைகூவல்

மு. சுந்தரமூர்த்தியின்
பிரமிள் கவிதைகள் - 1
பிரமிள் கவிதைகள் - 2
பிரமிள் கவிதைகள் - 3
பிரமிள் மேலும் சில குறிப்புகள்

PS: வலையுலகிலும் பிரமிள் - சுரா சார்ந்து காலச்சுவடு - எதிர் அரசியல் உண்டு. எனக்கு இவை இரண்டிலுமே ஆர்வம் இல்லையென்று சொல்லிவிடுகிறேன்.

பிங்குஸ்தான்

Monday, October 29, 2007

பெங்களூர் புத்தக கண்காட்சி - அள்ள அள்ளப் பணம் - ஜல்லி

நான் எழுதும் பதிவுகளை என்னைத்தவிர யாரும் ரொம்ப சீரியஸா எல்லாத்தையும் படிப்பாங்களான்னு எனக்கு எப்பவுமே ஒரு டவுட் உண்டு; ஏன்னா நான் அப்படி படிக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தும். என் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கவுன்டர் சொல்லும் உண்மைகளை வைத்தும் தான்.

"...பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் "அள்ள அள்ளப் பணம்" நன்றாகயிருக்கும் என்றார். தான் முதலில் கொஞ்ச காலம் நேரடி பங்கு வர்த்தகத்தில் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மியூட்சுவல் பண்ட் தான் என்று சொல்லி கொஞ்சம் பயப்படவைத்தார். நான் பருப்பு மாதிரி வாழ்க்கையில் எப்பவும் தான் ரிஸ்க் எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே இதிலும் எடுப்போம் என்று கூறினேன். மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை..."

என்று கோவை வலைபதிவர் சந்திப்பின் பின் எழுதி நான்கு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அள்ள அள்ளப் பணத்தை கைகளில் பார்க்க இத்தனை நாட்கள் ஆனதற்கு நானொருவனே தனிப்பட்டமுறையில் காரணமாகயிருக்கமுடியும். பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சட்டென்று சனியனாய் முளைத்த இன்னொரு பிரச்சனை. பிரச்சனைகள் முடிந்து ஆராம்சேயாய் உட்கார்ந்த நேரம் பங்குச்சந்தை மீண்டும் இன்னொரு உச்சத்தை எட்டியிருந்தத்து 19,000 BSE.

என் கியூபிக்கில் அமர்ந்திருக்கும் மற்ற இரு நபர்களுமே பங்குச்சந்தையில் கொட்டை போட்டவர்கள் என்று சொல்லலாம் - ஒரு நபர் ஏறக்குறைய 5 லட்சங்களுக்கு இன்வெஸ்ட் செய்துவிட்டு எப்பொழுதும் ICICI Directன் பக்கத்தை திறந்து உட்கார்ந்திருப்பார்(10.30 - 3.30) பின்னர் அன்றைய நாளுக்கான Analysis நடக்கும் 3.30க்குப் பின்னர். இப்படி நாளொன்றுக்கு சரியான அளவிளான நேரத்தை பங்குவணிகத்தில் செலவிட்டால் மாதம் பிறந்தால் சம்பளம் தந்து தனக்கு மூன்றுவேளை சோறுபோடும் தன் முதலாளிக்காவது நேர்மையாக இருக்கிறாரார்களா என்று கொஞ்சம் சுயநேர்மையைக் கேள்வி கேட்கும் புண்ணியவான்களுக்கு(!!!) பதில் என்னிடம் இல்லை வேண்டுமானால் உண்மையில் எங்கள் முதலாளியிடம் இருக்கலாம். ஆனால் எங்கள் வேலையில் மீது திருப்தி இல்லாவிட்டால் மாதாமாதம் சம்பளமும் கொடுத்து வருடக்கடைசியில் போனஸும்/அப்ரைசலும் கொடுப்பது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் தான். ஒருவேளை 'கோடி'களில் புலங்குபவர்கள் முட்டாள்களாக இருப்பார்களோ! ம்ம்ம் இருக்கலாம் ஏனென்றால் அவர்கள் பதிவெழுதுவதில்லையே!

அப்படிப்பட்ட ஒரு நல்லநாளில் தான் நானும் ICICIல் Demat அக்கவுன்ட்டும் ட்ரேடிங் அக்கவுன்ட்டும் தேவைகளுக்காக ஒரு சேவிங் அக்கவுன்ட்டும்(Shaving இல்லை saving) திறந்தேன். அதற்கு நாட்கள் அதிகமானதாலும் மார்க்கெட் இன்வெஸ்ட் செய்யும் நிலையில் இருந்ததாலும் நண்பருக்கு 10,000 ரூபாய் அனுப்பி ஷேர் வாங்கச் சொல்லி என்னுடைய ட்ரேடிங் வாழ்க்கையைத் தொடங்கினேன். உண்மையில் ரிஸ்க் எடுப்பதில் எனக்கிருக்கும் இயல்பான விருப்பம் தான் என்னை இதில் இறங்கச் சொன்னாலும் சோம. வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் I & II அதற்கான தைரியத்தை எனக்குக் கொடுத்தது என்று சொல்லலாம்.

உண்மையில் நான் என்ன விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேனோ அதைத் தெளிவாக விளக்கியது அள்ள அள்ளப் பணம் புத்தகம். ஏற்கனவே ஆங்கிலத்தில் கட்டுரைகளாகவும் நண்பர்களுடன் இந்தி/ஆங்கிலத்தில் உரையாடல்களாகவும் என் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பியிருந்தேன் என்பதால் என்னுடைய தேடல் எது என்று எனக்குச் சரியாகத் தெரிந்திருந்தது ஆனால் இப்படி புதிதாய் ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட் செய்யப்போகும் ஒருவர் எதிர்பார்ப்பது என்ன என்பது தெரிந்து எழுதப்பட்டிருப்பது அதிசயம் என்று தான் சொல்வேன் நான்.

ஓவராய் தியரியாகச் சொல்லி போரடிக்காமல் அதே சமயம் வெறும் ப்ராக்டிக்கல் அப்ரோச்சாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து எழுதப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் வெற்றியின் முக்கிய காரணம். கூட வேலை செய்யும் டிரேடிங் புலிகளிடம் இப்படி ஒரு விஷயம் செய்யத் துணிந்திருக்கிறேன் என்று சொன்னதும் அப்படி ஒன்றும் ஆதரவு அலைகள் எதுவும் எழவில்லைதான். சொல்லப்போனால் மிரட்டியவர்கள் தான் அதிகம் - அதிலும் இன்வெஸ்ட் செய்யும் நண்பர்களே கூட! ஆச்சர்யமாயிருக்கிறதா - எனக்கு இல்லை.

சரிதான் என்று நினைத்தவனாய் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி Reliance Energy ஒரு ஷேர் 1475 க்கு என்று 10,000 ரூபாய்க்கு 6 ஷேர் வாங்கிப் போட்டேன் வெள்ளிக்கிழமை(19/10/2007). சாயங்காலம் 1350ல் நின்றுகொண்டிருந்தது. சோம.வள்ளியப்பன் புத்தகத்தில் சொல்லியிருப்பது போல் இரவு - பகல் லாஜிக் என்று நினைத்து நான் ஒன்றும் பெரிசாய் கவலைப்படவில்லை. என் மனதில் ஒரு கணக்கு இருந்தது 20% அதிகம் அவ்வளவே. அது இரண்டு நாளில் கிடைத்தாலும் சரி - ஒரு வருடத்தில் கிடைத்தாலும் சரி என்று. மார்கெட், நண்பர் சொன்னது போலவே அடுத்த ட்ரேடிங் நாள் முன்னோக்கி நகர நான் காத்திருந்தேன் அடுத்த செவ்வாய் கழிந்து புதன்(24/10/2007) வரை என் கணக்கு 20% க்கு மேல் வந்த நிலையில் 1670 ரூபாய்க்கு சட்டென்று அவரிடம் விற்கச் சொல்லிவிட்டேன். மூன்று நாட்களில் 20% லாபம் சொல்லப்போனால் 2000 ரூபாய். இதை இங்கே சொல்ல வந்ததன் காரணம் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என் மாமா என்னிடம் ஷேர் மார்கெட்டைப் பற்றி படித்துக் கொண்டு விசாரித்துக் கொண்டோ இரு என்று சொன்ன பொழுது என் வயது 16 - 17 இருக்கும். நான் உண்மையில் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது வயது 24 சொல்லப்போனால் 7 ஆண்டுகள் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. ஆனால் என்னுடைய பைனான்சியல் பொஸிஷன் அப்படி என்று வைத்துக் கொண்டாலும் பைனான்ஸியலி நான் ஸ்ட்ராங்கான கடைசி மூன்று வருடங்களில் கூட நான் அதைச் செய்யவில்லை. இப்பொழுது தான் செய்யத் தொடங்கியிருக்கிறேன். இன்று நான் லாபம் சம்பாதித்ததைப் பற்றி பெருமை பேச இதைச் சொல்லவில்லை, பணம் தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஒரு ஆலோசனையாய் டிரேடிங்க் செய்யச் சொல்லவும் இதை எழுதவில்லை. எனக்குத் தெரிந்து அள்ள அள்ளப் பணம் புத்தகத்தை வாங்கி ஒரு முறை புரட்டிப் பாருங்கள் அவ்வளவே.

ஏன் என்றால் ட்ரேடிங்க் செய்வதென்பது பணத்துடன் சம்மந்தப்பட்டது இன்னமும் பணத்தை லக்ஷ்மிகரமான விஷயமாக நினைத்து வேடிக்கைக்கான ஒன்றாக விளையாட்டாக பயன்படுத்த நிறைய பேருக்கு பயம் இருக்கும். என் அப்பாவிடம் இதைப்பற்றிச் சொன்னால் ஒரு மணி நேரம் வேறெதாவது விஷயத்தைச் சுத்திச் சுத்தி பேசி கடைசி ஐந்தாவது நிமிடத்தில் இங்கே வந்து நின்று கேட்பார் இது தேவையா என்று! ஆனால் நான் சொல்வதெல்லாம் ஒருமுறை படித்துப் பாருங்கள் என்பதுதான்.

----------------------------------

இந்த வருடம் பெங்களூர் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பெரிய அளவிலான பதிவுகள் வெளிவரவில்லை காரணம் தெரியாது; பத்ரி ப்ராங்க்போர்ட் சென்றிருந்தது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகவே நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரனும் வரலை(நினைக்கிறேன் - கடைசி நாள் வந்தாரா தெரியாது). நான் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வரவே நேரம் போதலை! மழை கொட்டியதால் ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாமல் காமெரா கொண்டு போகவில்லை. ஆனால் நிறைய நல்ல படங்களை மிஸ் செய்தேன். ராம் எனக்கு காலையில் ஃபோன் செய்து என்னை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய்வந்துவிட்டார்(சொல்லப்போனால் நான் தான் அவரை மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லணும் - சனிக்கிழமை காலை தூக்கம் வராததால் காலையிலேயே கிளம்பி புத்தகக் கண்காட்சிக்குப் போய்ட்டு வந்துட்டேன்). நான் சாட்டிங்கில் அன்றிரவு, என்னை அழைத்துச் செல்லாததற்காக நல்லப்புள்ளை போல் திட்டினேன் வாங்கிக் கொண்டார்.

வழக்கம் போல் காலச்சுவடு - உயிர்மை - கிழக்கு தான் என் நோக்கமாகயிருந்தது. மூன்றிலும் இந்த முறை கொஞ்சம் அதிக புத்தகம் அள்ளினேன் என்று நினைக்கிறேன். ஆனால் வாரநாட்களில் மழை பெய்ததால் இரண்டாம் நாள் சனிக்கிழமையும் ஒன்பதாம் நாள் சனிக்கிழமை மட்டுமே புத்தக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கிழக்கில் ரெகுலர் கஸ்டமர்னு சொல்லி 15% டிஸ்கவுண்ட் கொடுத்ததை இங்கே குறிப்பிட வேண்டும் என்னை மீண்டும் நினைவில் வைத்திருந்தவரின் பெயர் நினைவில் இல்லை; போன தடவை பெங்களூர் புத்தகச் சந்தைக்கு வந்திருந்தீங்க இல்லையா என்று கேட்டார்! என்னை சென்னை புத்தக சந்தையிலும் அவர் பார்த்திருக்க வாய்ப்புண்டு. போன தடவை போல் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தோ என்னமோ இந்த முறை கிழக்கே கிரடிட் கார்ட் ட்ரான்ஷாக்ஷன் செய்யும் வசதியுடன் வந்திருந்தார்கள். ஆனால் நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவரிடம் இந்த முறையும் அதே கி.மு - கி.பி மதன் புத்தகத்தைக் காண்பித்து அருமையான புத்தகம் சார் வாங்கிக்கோங்க என்று மற்றொரு விற்பனைப் பிரெதிநிதி சொன்னார். மதன் எதுவும் காசுகொடுத்து ஆள் செட்டப் பண்ணியிருக்காரா கிழக்கில் தெரியாது!

ஜெயமோகனின் காடு, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே Anyindian.comன் ஷாப்பிங்க் கார்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. சரி இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஆட்டையைப்(காசு கொடுத்துத்தாம்ப்பே) போட்டுடலாம்னு நினைச்சேன் ஆனால் ஜெமோவை யாருமே எடுத்துவரலை(சில புத்தகங்கள் உயிர்மையில் இருந்ததுன்னு நினைக்கிறேன் - அங்கே தான் நினைவின் நதியில் வாங்கினேன்). வேறென்ன செய்ய ஷாப்பிங் கார்ட் காலியாய்டுச்சு இப்ப ;-). காலச்சுவடில் பிரமீள் நினைவோடை - சுந்தர ராமசாமி வாங்கினேன், ஒரே இரவில் அதுவும், நினைவின் நதியில் - ஜெயமோகனும் தொடர்ச்சியாகப் படித்தேன் கொடுத்து வைச்சிருக்கணும் நான்; இப்படி ஒரு காம்பினேஷன் கெடச்சதுக்கு. விமர்சனம் வருது வருது.

பிறகு பெண்ணிய ஜல்லி விமர்சனம் செய்வதற்காக - இந்துமதி - லக்ஷ்மியினுடைய சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன்(அதுவும் காசுகொடுத்துத்தான்).

என்னுடன் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நீயும் என்கூட வாயேன் கொஞ்சம் புஸ்தகம் வாங்கிட்டு வரலாம் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார் முதல் வாரத்தில் இருந்து முதல் வாரம் எஸ்கேப் ஆகியிருந்தேன். அடுத்தவாரம் மாட்டிக்கொண்டேன்(ஹாஹா) அவர் மனைவி மற்றும் மாமியார் உடன் புஸ்தகம் வாங்க வந்திருந்தார் - ஜாவாவில் Head First Java வாங்கிக்கச் சொல்லிவிட்டு தமிழில் தாயுமானவன் - பாலகுமாரன் மட்டும் சஜஸ்ட் பண்ணினேன்.(பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் பற்றி ஒரு பதிவு வருது வருது வருது). அவர் விகடனில் நுழைந்து 'இவன் தான் பாலா' வாங்கினார் அங்கே அவரைத் திட்டினேன் அதை வாங்குவதற்காக. நான் வாலியின் கிருஷ்ண விஜயம் 1 & 2 வாங்கினேன்(வெறும் மணியம் செல்வம் ஓவியத்திற்காக).

நான் வாங்கிக் குமிப்பதைப் பார்த்த நண்பரின் மாமியார் "தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போலிருக்கே" என்று கேட்டார் எனக்கு முதலில் உள்குத்து புரியலை. நானும் எப்பவும் சொல்றதைப் போல், "இல்லம்மா எனக்கு இன்னும் கல்யாண வயசாகலை, 24 தான் ரன்னிங்..." பாவமேன்னு சொன்னேன். அப்புறம் அந்தப்பக்கமா திரும்பி அவங்க பொண்ணுக்கிட்ட "பொண்டாட்டி வந்து தான் இதையெல்லாம் திருத்தணும்னு" சொல்ல எனக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. ஆனால் இதெல்லாம் நடந்த உண்மை பதிவு செய்து வைக்கிறேன்(ஹாஹா).

பின்னர் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட நண்பர் கால்டாக்ஸி அரேன்ஞ் செய்துகொண்டார். நான் கீர போண்டாவில் புத்தககுவியலுடன் அல்ஸூரை நோக்கிப் பயணித்தேன். என் கம்பெனி கொடுத்த மிக அருமையான ப்ரொடக்ட்டான(என் கம்பெனி ஒரு ப்ரொடக்ட் ஓரியண்ட்டட் கம்பெனி - ஆனால் Bag தயாரிப்பில் இல்லை) Bagன் மீதான நம்பிக்கையில் அடாத மழையிலும் கிளம்பினேன். சுமார் 10 கிலோமீட்டர் இருக்கணும்(கூடவும் இருக்கலாம்) ஒரு சொட்டு தண்ணி கூட பைக்குள்ள வரலை!!!. அருமையான பை ஒன்றைக் கொடுத்த எங்க கம்பெனிக்கு ஒரு ஓ!!!

நண்பர் ஒருவர் புத்தகக் கண்காட்சிக்கு போவதுவும் புத்தகம் வாங்வதும் அதைப் புகைப்படமாய் போடுவதும் விமர்சனம் எழுதுவதும் அறிவாளி என்று சொல்லிக்கொள்ளத்தான் ஆனால் அப்படியெல்லாம் செய்தால் அறிவாளி என்று அர்த்தம் இல்லை என்று சொன்னார். அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். கீழிருக்கும் புகைப்படங்களும் ;-)


பெரிதாய் தெரிய புகைப்படத்தின் மேல் கிளிக்கவும்...

பிங்குஸ்தான்

Friday, October 26, 2007

இளவரசிகளுக்கு கண்டணங்கள்

வலைபதிவுகளில் எழுதுவது எப்படி என்று அவ்வப்பொழுது மக்கள் வகுப்புகள் எடுப்பது உண்டு அப்படி ஒரு வகுப்பு என்று இதை வைத்துக்கொள்ளலாம். கீழிருப்பது பொன்னியின் செல்வனின் இருந்து சுடப்பட்ட ஒரு பகுதி. ஐந்தாம் பாகம் - எண்பதாம் அத்தியாயம் - நிலமகள்காதலன். நீங்களே பாருங்கள் இந்த இளவரசிகளுக்கு இருக்கும் கொழுப்பை. அருள்மொழித்தேவரின் முடிசூட்டு விழாவிற்குக் கூட வராமல் இவர்கள் ஜோசியக்காரர்களைக் காணச் செல்கிறார்கள். அவர்களுக்கு எனது கண்டனங்கள்!!!

இளவரசிகள் வீற்றிருந்த பல்லக்கைப் பொன்னியின் செல்வரின் குதிரை நெருங்கியது. சற்று பின்னால் குதிரையை நிறுத்திய வந்தியத்தேவன், "ஜாக்கிரதை! இளவரசிகளின் அந்தப் பொல்லாத பல்லக்கு நம் சாது குதிரையை மோதிவிடப் போகிறது!" என்றான். கிட்டத்தட்ட அதே இடத்தில் முன்னொரு தடவை நந்தினியின் மூடுபல்லக்கின் மீது அவன் குதிரையைக் கொண்டு போய் மோதிவிட்டுக் "குதிரையைப் பல்லக்கு மோதுகிறது!" என்று கூக்குரலிட்டது அவனுக்கு நினைவு வந்தது. அச்சம்பவம் நடந்து ஆறு மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. ஆனால் இந்தச் சிறிய காலத்துக்குள் எத்தனை எத்தனை முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தேறி விட்டன!

குந்தவை வந்தியத்தேவனுடைய வார்த்தைகளினால் ஏற்பட்ட பூரிப்பை அடக்கிக் கொண்டு, "தம்பி! உங்களைப் பார்த்தால் ஏதோ குதூகலமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வருவதாகத் தோன்றுகிறதே! உங்களுடைய திருமுகங்கள் அவ்வளவு மலர்ச்சியுடன் விளங்குகின்றன!" என்றாள்.

"ஆம், அக்கா! குதூகலமான விஷயம் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்தோம். ஆனால் அது உன் தோழி வானதிக்கு அவ்வளவு குதூகலம் தராது. என்னுடைய திருமண நாள் நெருங்கி வந்து கொண்டிருக்கிறதல்லவா? நான் காதல் கொண்டு மணந்து கொள்ளப்போகும் மங்கையைப் பார்த்து மகிழ்ந்தோம். அவளுடைய ரூப லாவண்யங்களை பற்றிப் பேசிக் கொண்டு வருகிறோம்!" என்றார் பொன்னியின் செல்வர்.

சற்றுமுன் பிரகாசமாக விளங்கிய இரு பெண்களின் முகங்களும் உடனே வாட்டமுற்றன. வானதி தலையைக் குனிந்து கொண்டாள். குந்தவையின் முகத்தில் கோபம், வியப்பு, ஐயம், ஆத்திரம் முதலிய வெவ்வேறு பாவங்கள் தோன்றி மறைந்தன. "இது என்ன வெட்கமற்ற பேச்சு? இந்தப் பெண்ணின் மனத்தை வருத்தப்படுத்துவதில் உனக்கு என்ன சந்தோஷம்?" என்றாள்.

வானதி குனிந்த தலையை நிமிர்த்திக் குந்தவையைப் பார்த்து, "அக்கா! இது என்ன வார்த்தை? எனக்கு எதற்காக வருத்தம்?" என்றாள்.

ஒன்றுக்கும் மறுமொழி சொல்லாமல் பொன்னியின் செல்வர் புன்னகை பூத்த முகத்துடன் நிற்பதைக் கண்ட இளையபிராட்டி "கொள்ளிடக்கரைக்கல்லவா போய்த் திரும்புகிறீர்கள்? அங்கே எந்தப் பெண்ணைப் பார்த்தீர்கள்? எந்த ஊர்? என்ன பேர்? என்ன குலம்?" என்று கேட்டுக் கொண்டே போனாள்.

இப்போது வந்தியத்தேவன் குறுக்கிட்டு, "தேவி! இளவரசர் மணக்கப்போகும் குலமகள் யாரையும் நாங்கள் பார்த்துவிட்டு வரவில்லை. இந்தப் பஞ்சநதி தீரத்தில் பொலிந்து விளங்கும் நிலமாமகளைத்தான் நெடுகிலும் பார்த்து வியந்துகொண்டு வந்தோம். சோழ வளநாட்டின் இயற்கை அழகுகளைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தோம். இளவரசர் இந்த அழகிய நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்ளும் நாள் நெருங்கி வருகிறதல்லவா? இவர் இந்த இரு நிலமடந்தையின் பேரில் கொண்ட காதலைப் பற்றித்தான் குறிப்பிட்டார்!" என்றான்.

"ஆகா! என் சகோதரனுக்கு இப்படியெல்லாம் விகசிதமாகப் பேச முன்னெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அவனுக்குத் தாங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது!" என்றாள்.

அருள்மொழிவர்மர் சிரித்துவிட்டு, "நண்பரே! தங்களுக்கு நன்றாக வேண்டும்! தங்களுடைய சிநேகத்துக்குப் பிறகு எனக்குத் தந்திர மந்திரமெல்லாம் வந்திருக்கிறது என்று முன்னமே நான் சொல்லவில்லையா? என் தமக்கையாருக்கும் அவ்விதமே தோன்றியிருக்கிறது, பாருங்கள்!" என்றார்.

"இது என்ன வீண் பழி! தமக்கையும், தம்பியும் ஒத்துப் பேசிக் கொண்டதுபோல் ஒரே மாதிரி என் பேரில் குற்றம் சுமத்துகிறீர்களே?" என்றான் வந்தியத்தேவன்.

"இன்னும் தங்கள் பேரில் பல குற்றங்கள் இருக்கின்றன. என் தம்பி சொல்லியிருக்க முடியாத குற்றங்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நடுச் சாலையில் நின்று சொல்ல முடியாது!" என்றாள் குந்தவை.

வந்தியத்தேவன், "நான் சந்தேகித்தது சரியாய்ப் போய் விட்டது!" என்றான்.

"என்ன சந்தேகித்தீர்கள்?"

"என்னை ஈழ நாட்டுப் படைக்குச் சேனாதிபதியாக்கி அனுப்புவது என் குற்றங்களுக்காக எனக்குத் தீவாந்தர சிட்சை விதிப்பதேயாகும் என்று சந்தேகித்தேன்."

"பார்த்தீர்களா, அக்கா! சோழ குலத்தாரின் நன்றியறிதலில் இவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிகிறது அல்லவா?"

"நமக்கு இவரிடம் நன்றி சிறிதும் இல்லை என்பது உண்மை தான்!"

"இது என்ன, நீங்களும் இப்படிச் சொல்லுகிறீர்களே?"

"அன்னியர்கள் செய்யும் உதவிக்கு நன்றி செலுத்தலாம். நண்பர்களுக்குள் நன்றி எப்படி ஏற்படும்? திருவள்ளுவர் சொல்லியிருப்பது ஞாபமில்லையா?
'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு!'
நழுவிய உடையை எடுத்துக் கட்டிவிட்டதற்காக இடை கைக்கு நன்றி செலுத்த வேணுமா?" என்றாள் குந்தவை.

"தேவி! நன்றி செலுத்த வேண்டியதேயில்லை. தண்டனை விதிக்காமலிருந்தால், அதுவே பெரிய நன்றியாகும்!"

"தம்பி! நீயும் சரி, இவரும் சரி, ஒன்று நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இவரை எனக்கு உதவியாயிருக்கும்படியாக நம் தமையன், வீர சொர்க்கம் எய்திய கரிகாலன், அனுப்பி வைத்தான். அந்தக் கடமையிலிருந்து இவரை நான் விடுதலை செய்து விடவில்லை!" என்றாள் குந்தவை.

"இவருக்கு விடுதலை தரவே வேண்டாம், அக்கா! ஆயுள் தண்டனையாகவே அளித்தாலும் எனக்குச் சம்மதந்தான்!" என்றார் இளவரசர்.

"இலங்கையில் இவரால் எனக்கு ஆகவேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன" என்றாள் குந்தவை.

"போவதற்கு முன்னால் தங்களிடம் விடைபெற்றுச் செல்வேன், தேவி!" என்றான் வந்தியத்தேவன்.


"அப்படியானால், பழையாறைக்குத் தாங்கள் வந்து என்னிடம் விடைபெறும்படி இருக்கும்" என்றாள் குந்தவைப் பிராட்டி.

"அக்கா! இப்போது எங்கே புறப்பட்டீர்கள்?" என்று அருள்மொழிவர்மர் சிறிது வியப்புடன் கேட்டார்.

"திருவையாறுக்குப் போகிறோம் இன்று மார்கழித் திருவாதிரைத் திருநாள் அல்லவா? செம்பியன்மாதேவியும் மதுராந்தகரும் பூங்குழலியும் காலையிலேயே சென்றார்கள் நீங்களும் வருகிறீர்களா?" என்றாள் குந்தவை.

"இல்லை; நாங்கள் இப்போது வரவில்லை திருவையாறு நகருக்குள் போகக் கூடாதென்றுதான் ஆற்றங்கரையோடு மேற்கே சென்று திரும்பி வந்தோம்."

"அப்பர் பெருமான் திருவையாற்றில் கைலாசத்தையே கண்டு பரவசமடைந்தார். உங்களுக்கு அங்கே போகவே பிடிக்கவில்லை போலிருக்கிறது. ஒருவேளை நீங்களும் வீர வைஷ்ணவர்கள் ஆகி விட்டீர்களா என்ன?"

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; திருவையாறு சென்றால், அப்பர் பெருமானைப்போல், அங்கே போக வேண்டுமென்பது என் எண்ணம்."

"அப்பர் எப்படிச் சென்றார்?"

"அவருடைய பாடலிலேயே சொல்லியிருக்கிறாரே! 'யாதும் சுவடு படாமல்' சென்றார். ஆடம்பரம் எதுவுமில்லாமல், தாம் திருநாவுக்கரசர் என்பதைக் காட்டிக் கொள்ளாமல், பூஜைக்காகப் புஷ்பமும் நீரும் கொண்டு சென்ற அடியார் கூட்டத்தின் பின்னால் சென்றார். அதனால் திருவையாற்றில் கைலாசத்தையே அவர் காண முடிந்தது. நாம் அங்கே இந்த ராஜரீக ஆடம்பரங்களுடன் சென்றால், நாமும் இறைவனைத் தரிசிக்க முடியாது; ஜனங்களும் சுவாமி தரிசனத்தை மறந்துவிட்டு நம்மைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு நிற்பார்கள்!..."

"ஆமாம், ஆமாம்! உன்னுடைய ஜாதக விசேஷம் அப்படி! உன்னைக் கண்டதும் மக்கள் சூழ்ந்து கொண்டு 'மன்னர் மன்னருக்கு ஜே! பொன்னியின் செல்வருக்கு ஜே!' என்று கோஷமிடத் தொடங்குவார்கள். ஆனால் எங்களுக்கு அவ்வளவு அபாயம் இல்லை. மேலும் நாங்கள் ஜனக்கூட்டத்துக்கு மத்தியில் போகவும் மாட்டோம். திருவாதிரைத் திருநாளுக்காகச் சுவாமி எழுந்தருளல் நடக்கும்போது, திருவையாற்றிலுள்ள நம் அரண்மனை மேல் மாடத்திலிருந்து ஐயாறுடை இறைவனைத் தரிசித்துக் கொள்வோம்."

"அக்கா! ஒரு பழம் பாடல் நினைவு இருக்கிறதா? அண்ட சராசரங்களையும், அகில புவனங்களையும், ஆகாச வெளியிலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் படைத்தவர் இறைவன்; அவரை 'ஆதிரையான்' என்றும், 'திருவாதிரை நட்சத்திரத்துக்கு மட்டும் உரியவன்' என்றும், மக்கள் கருதுவது என்ன பேதைமை? இப்படிப்பட்ட கருத்துள்ள அந்தப் பாடல் தங்களுக்கு நினைவு இருக்கிறதா?"

"நினைவிருக்கிறது, தம்பி! ஆனால் எல்லா நட்சத்திரங்களுக்கும் உரியவன் திருவாதிரைக்கும் உரியவன்தானே?"

"சரி, நீங்கள் போய் வாருங்கள்! எப்போது தஞ்சைக்குத் திரும்பி வருவீர்கள்?"

"தஞ்சைக்கு இப்போது நாங்கள் திரும்பப் போவதில்லை திருவையாற்றிலிருந்து பழையாறை போகிறோம்."

"என்ன, என்ன? என்னுடைய மகுடாபிஷேகத்துக்கு இல்லாமலா போகிறீர்கள்?" என்றார் இளவரசர்.

"ஆம், ஆம்! உன்னுடைய மகுடாபிஷேக வைபவத்தில் எனக்கும், வானதிக்கும் என்ன வேலை?"

"ஆகா! தாங்கள் இல்லாமல் என்னுடைய பட்டாபிஷேகம் நடைபெறாது!"

"எல்லாம் நடைபெறும், ஏன் நடைபெறாது? பட்டாபிஷேகத்துக்கு நாள் வைத்துக் கொடுத்தவர் யார்? இராமருடைய பட்டாபிஷேகத்துக்கு நாள் பார்த்துச் சொன்னவரின் சந்ததியில் வந்தவர் அல்லவே?"

"எனக்கு நாள் நட்சத்திரம், சோதிடம் ஆருடம் எதிலும் நம்பிக்கை இல்லை, அக்கா! நம் கடமையைச் செய்யும் எல்லா நாளும் நல்ல நாள்தான்! சோம்பியிருக்கும் நாட்களே கெட்ட நாட்கள்!" என்றார் பொன்னியின் செல்வர்.

"உன்னுடைய வாழ் நாட்கள் எல்லாம் அத்தகைய நல்ல நாட்களாகவே இருக்கட்டும், தம்பி! நாங்கள் சென்று ஐயாறப்பரிடமும் அறம் வளர்த்த நாயகியிடமும் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறோம்!" என்றாள் குந்தவை.

"எனக்காக என்ன பிரார்த்தனை செய்யப் போகிறீர்கள்?"

"நிலமகள் மேல் நீ கொண்டிருக்கும் காதல் பூர்த்தி ஆகட்டும்; உன் மகுடாபிஷேகம் விக்கினமின்றி நடைபெறட்டும்" என்று ஐயாறுடைய இறைவரிடம் பிரார்த்திக்கிறோம். உன் உள்ளம் சோழர் தொல்குடிக்கு உரிய அற வழியிலிருந்து விலகாமலிருக்கட்டும் என்று அறம் வளர்த்த நாயகியின் சந்நிதியில் பிரார்த்தித்துக் கொள்கிறோம்."

"அப்படியானால், நீங்கள் எனது பட்டாபிஷேகத்துக்கு நிச்சயமாக இருக்கப் போவதில்லையா?"

"பழையாறையிலிருந்து அகக்கண்ணால் கண்டு மகிழ்கிறோம்."

"அக்கா! தாங்கள் இந்தக் கொடும்பாளூர்க் கோமகளின் பிடிவாதத்துக்குச் சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள். இவள் என்னுடன் சோழ சிங்காதனம் ஏறுவதற்கு மறுத்தால், உலகமே அஸ்தமித்து விடும் என்று எண்ணுகிறாள்! இவளுடைய வீண் பிடிவாதம் விபரீதத்தில் முடியப்போகிறது. இவளுக்குப் பதிலாகச் சோழரின் சிங்காதனத்தில் வேறொரு பெண் அமர்ந்து விடப் போகிறாள்! அப்புறம் என் பேரில் குற்றம் சொல்லிப் பயன் ஒன்றுமில்லை" என்றார் இளவரசர் பொன்னியின் செல்வர்.

"நான் இவர் மீது என்றும் குற்றம் சொன்னதில்லை; இனிமேலும் குற்றம் சொல்லப் போவதில்லை, அக்கா!" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

"நீ சொன்னாலும் பயனில்லை, வானதி! மண்ணாசை கொண்டவர்களின் காதில் வேறு எதுவும் ஏறாது!" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.

"இந்த மண்ணாசையை என் மனதில் உண்டாக்கியவர் தாங்கள்தான் என்பதை மறந்து விடவேண்டாம். பெண்ணாய்ப் பிறந்த தாங்களே இந்த அழகிய சோழ நாட்டை விட்டுப் போக மனம் வரவில்லையென்றும், அதற்காகவே கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லையென்றும் பலமுறை என்னிடம் சொன்னதில்லையா?" என்றார் அருள்மொழி.

"அப்போதெல்லாம் என் வார்த்தைகள் உன் காதில் ஏறவே இல்லை. உலகத்தில் இன்னும் எத்தனையோ அழகிய நாடுகள் இருக்கின்றன என்று சொல்லி வந்தாய்! இந்த வாணர் குலத்து வீரரின் போதனைதான் உன்னை இப்படி நிலமடந்தையின் காதலன் ஆக்கிவிட்டது!" என்றாள் குந்தவைப்பிராட்டி.

"தெய்வமே! அந்தப் பழியும் என் பேரிலேதானா வந்து விழ வேண்டும்?" என்றான் வந்தியத்தேவன்.

"எவ்வளவோ பெரிய பயங்கரமான பழியைச் சுமந்தீர்களே? இந்தச் சிறிய பழிகளுக்கா பயந்துவிடப் போகிறீர்கள்? தம்பி! வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டோம்! சுவாமி எழுந்தருளும் நேரம் நெருங்கி விட்டது, போகிறோம்!" என்று கூறிக் குந்தவை சிவிகையாளருக்குச் சமிக்ஞை செய்தாள். பல்லக்கு மேலே சென்றது.

சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு பொன்னியின் செல்வரும் தஞ்சையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார்.

PS: கடைசியில் அருள்மொழித்தேவனுக்கு பட்டமளிப்பு விழா நடக்காதென்பதும் இப்ப ரொம்ப முக்கியமான குறிப்பா.

பிங்குஸ்தான்

Wednesday, October 24, 2007

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

சமீபத்தில் ஜூனியர் விகடனின் ஒரு கட்டுரையைப் படித்ததும் எனக்கென்னமோ இந்தத் தலைப்பு நினைவில் வந்தது. அதனால் வைத்திருக்கிறேன் அப்படியே. விஷயம் என்னான்னா நடிகை பத்மபிரியா இயக்குநர் சாமி நடிகைகள் விபச்சாரிகள் முகத்தில் முடி முகமூடி இது எதற்கும் இந்தப் பதிவிற்கும் சம்மந்தம் கிடையாது என்பது தான்.

சரி மேட்டருக்கு - நன்றி ஜூனியர் விகடன்

கர்ப்பமாக இருக்கும் மனைவியை அழைத்துக் கொண்டு பரிசோதனைக்கு சென்ற இடத்தில், ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று கணவனை பார்த்துச் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் கணவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவி, கருவையும் கலைத்துவிட்ட நிலையில், ‘லேப் ரிசல்ட்டில் சொல்லப்பட்டது தவறான தகவல்’ என தெரிய வந்தால் எப்படி இருக்கும்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் புவனேஸ்வரி தம்பதியின் வாழ்க்கையில்தான் விதி இப்படி விளையாடி இருக்கிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் முயற்சியால் அந்தத் தம்பதி மீண்டும் இணைந்துள்ளனர்.

புங்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும், மாரம்பாளையத்தைச் சேர்ந்த வாசுதேவனுக்கும் ஒரு வருடத்துக்கு முன்னால் திருமணம் இனிதே நடந்தேறி யுள்ளது. மண வாழ்க்கையின் விளைவாக புவனேஸ்வரி கர்ப்பம் தரிக்க... அருகாமையில் இருக்கும் விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பரிசோதனைக்கு சென்றுள்ளார்கள்.

மேற்கொண்டு நடந்த சம்பவங்களை வாசுதேவனே விவரிக்கிறார்.

‘‘என் பொண்டாட்டியை டெஸ்ட் பண்ணினப்ப, கூடவே எனக்கும் ரத்த பரிசோதனை செஞ்சாங்க. அப்பதான் இடிபோல அந்தத் தகவலை என்கிட்ட சொன் னாங்க. ‘உங்களுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிடிவ்’னு அவங்க சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போயிட்டேன். எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத எனக்கு எப்படி இந்த நோய் வந்துச்சுனு குழம்பிப் போய் இருந்தேன். இருந்தாலும், என் பொண்டாட்டிகிட்ட எந்த விவரத்தையும் சொல்லலை.

கொஞ்சநாள் கழிச்சு அவளும், என் மாமியார் சரஸ்வதியும் டெஸ்ட்டுக்குப் போயிருக்காங்க. அப்ப, ‘உன் புருஷனுக்கு எய்ட்ஸ் இருக்கு. அன்னிக்கு ரத்தத்தை டெஸ்ட் பண்ணும்போது கண்டுபிடிச்சுட்டோம்’னு அங்க இருந்த ஊழியர்கள் சொல்லி இருக்காங்க. அதைக் கேட்டதும் மயக்கமாகி விழுந்துட்டா.

உடனே அவங்க அம்மா, ‘நோய் இருக்கற புருஷனோட நீ வாழக்கூடாது’னு அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. அதோட, ஒரு தனியார் டாக்டர்கிட்ட போய் கர்ப்பத்தையும் கலைச்சுட்டாங்க. அதோட விட்டாங் களா... எய்ட்ஸ் இருக்கறதை மறைச்சுப் பொண் ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா என்மேல சத்தியமங்கலம் மகளிர் காவல்நிலையத்துல புகாரும் கொடுத்துட்டாங்க.

புகாரை விசாரிச்ச எஸ்.ஐ., ‘‘என்கிட்ட ‘உன் மேல எஃப்.ஐ.ஆர். எதுவும் போடாம விட்டுடறேன். கல்யாணத்தப்ப போட்ட நகை, சீர்வரிசை எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடு’னு சொன்னாரு. அதை வாங்க எங்க வீட்டுக்கு வந்த மாமியார் நடுவீதியில நின்னு கூப்பாடு போட்டு எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டாங்க.

இந்த சம்பவத்தால எனக்கு ரொம்ப அவமானமா போச்சு. நேரா சத்தியமங்கலம் ஜி.ஹெச்சுக்குப் போய் ‘ஹெச்.ஐ.வி.’ டெஸ்ட் செஞ்சேன். டெஸ்ட்ல எனக்கு ஹெச்.ஐ.வி. இல்லேனு சொல்லிட்டாங்க. அப்பதான் எனக்குப் போன உசுரே திரும்ப வந்துச்சு. கோயம்புத்தூர் ஜி.ஹெச்&சுக்கும் போயி டெஸ்ட் செஞ்சேன். அங்கேயும் இல்லைனுதான் முடிவு வந்துச்சு. அப்படியும் விடாம, ஹெச்.ஐ.வி. இருக்கறதை உறுதிப்படுத்தற டெஸ்ட் டான ‘வெஸ்டர்ன் பிளாட்’ டெஸ்ட்டையும் அஞ்சாயிரம் செலவு பண்ணி செஞ்சேன். அதிலேயும் இல்லைனுதான் ரிசல்ட் வந்துச்சு’’ என்றார் வாசுதேவன்.

இவ்வளவு டெஸ்ட்களையும் கடந்த இரண்டரை மாதங் களாக செய்த வாசுதேவன், அனைத்து ரெக்கார்டுகளையும் எடுத்துக்கொண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் உதய சந்திரனிடம் போயிருக்கிறார். நடந்த விவரங்களை கலெக்டரிடம் எடுத்து சொன்னவர்,

‘எனது மனைவியை நீங்கள்தான் என்னோடு சேர்த்து வைக்கவேண்டும். தவறான தகவல் தந்த விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று முறையிட்டிருக்கிறார். கலெக்டரும் ஈரோடு ஜி.ஹெச்&சின் கண்காணிப்பாளர் டாக்டர் உசேன் அலியிடம், ‘விசாரணை செய்து உடனே அறிக்கை தாக்கல் செய்யும்படி’ உத்தரவிட்டிருக்கிறார்.

மேற்கொண்டு நடந்த சம்பவங்களை டாக்டர் உசேன் அலி சொன்னார். ‘‘கலெக்டர் உத்தரவு போட்டதும் நான் விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போய் விசாரணை நடத்தினேன். அந்த விசாரணையில, வாசுதேவனுக்கு ஹெச்.ஐ.வி. இருக்கறதா தவறான ரிப்போர்ட் கொடுத்ததைத் தெரிஞ்சுகிட்டேன். பிரிஞ்சு போன தம்பதியை எப்படியாவது சேர்த்து வைக்கணும்னு கலெக்டர் சொல்லி இருந்ததால, அவங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்துக்கு வரச் சொல்லிப் பேசினேன். நடந்த சம்பவங்களை எல்லாம் புவனேஸ்வரிக்கு எடுத்து சொன்னதும், புரிஞ்சுகிட்டாங்க. அவங்க அம்மா சரஸ்வதிதான் கொஞ்சம் சமாதானம் ஆகலை. மூணு பேரையும் கலெக்டரோட கேம்ப் ஆபீஸ§க்குக் கூட்டிட்டுப் போனேன். தம்பதிக்கு ஆறுதல் வார்த்தை சொன்ன கலெக்டர் ‘ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்’னு அட்வைஸ் செஞ்சு அனுப்பி வைச்சார்’’ என்றார்.

புங்கம்பள்ளியில் இருந்த புவனேஸ்வரியை சந்தித்தபோது, ‘‘என் புருஷன்கூட திரும்ப சேர்றதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாசத்துல நல்லநாள் பாத்து அவரோட வீட்டுல கொண்டுபோய் விடறதா சொல்லி இருக்காங்க. ஆனா, அவசரப்பட்டுக் கருவை கலைச்சதை நினைச்சுதான் கலங்கிப் போயிருக்கேன்’’ என்றார் ஈர விழிகளுடன்.

கலெக்டர் உதயசந்திரனை சந்தித்தபோது, ‘‘ஹெச்.ஐ.வி. இருப்பதாக ஒரு தவறான ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார் லேப் டெக்னீஷியன். அதனால ஒரு குடும்பத்துல என்னென்னமோ நடந்து போச்சு. தவறாக டெஸ்ட் செய்த லேப் டெக்னீஷியன் தாமஸ் தற்போது திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாற்றலாகி சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளேன். விரைவில் அந்தத் தம்பதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தொகுப்பு ஊதிய அடிப் படையில் ஏதேனும் வேலை போட்டுத்தர ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் நாகராஜன், திருவள்ளூர் சென்றுவிட்ட தாமஸிடம் இப்பிரச்னை பற்றி விசாரணை நடத்தியிருக் கிறார். நம்மிடம் பேசிய நாகராஜன்,

‘‘தாமஸிடம் நான் விசாரித்ததில், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. வாசுதேவன் ரத்தத்தை பரிசோதித்தபோது என்ன முடிவு வந்ததோ அதைத்தான் ரிப்போர்ட்டாக கொடுத்தேன்’ என்கிறார். ஆகவே எங்கு தவறு நடந்தது... இதில் வேறு ஏதாவது குழப்பங்கள் நடந்திருக்குமா என இலாக்காபூர்வ விசாரணை நடந்து வருகிறது. அது முடிந்த பிறகுதான் அடுத்து என்ன செய்வது என முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

சரி இதில் இருந்து நான் என்ன சொல்லவருகிறேன் என்பது போன்ற கேள்விகளில் இறங்கிவிடாதீர்கள். நான் சொல்ல வருவது ஒன்றுதான் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது ரொம்பவும் பழைய கான்செப்ட்; இப்பல்லாம் ஒரு பானை சோற்றை பதம் பார்க்க வேண்டுமென்றால் எல்லா பருக்கைகளையும் தான் பார்க்க வேண்டும்.

அந்தப் பெண்ணின் மீது தவறில்லை தான்; கணவனுக்கு எய்ட்ஸ் என்று தெரிந்ததும் விலகிச் செல்வது தவறாகச் சொல்லவில்லை அப்படியே மாமியாரின் தூண்டுதல்களையும்.

அப்ப என்னதாண்டா சொல்லவர்ற "இயக்குநரால் அடிவாங்கிய, அசிங்கப்படுத்தப்பட்ட பெண்ணைப் பற்றிய பதிவுகள் வரும் அதே வேளையில் இப்படி தான் தவறே செய்திராத பொழுதும் பழிவாங்கப்பட்ட ஆணைப்பற்றிய பதிவு வரணும் அதுக்காகவா" என்று கேட்டால் எனக்குப் பதில் தெரியவில்லை.

இன்னிக்கு புதன் கிழமை வழமை போல் பெங்களூரின் புகழ் கூறும் ஹோட்டல் Samarkhandற்குச் சென்று உண்டுகொழுத்து உறக்கம் கண்களைத் தழுவ வேலை தலைக்கு மேல் இருக்க தூங்கிவிடாமல்(எப்படி அர்த்தப்படுத்தினாலும்) இருக்க எழுதுறேன்னும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்கு உண்மையிலேயே எதற்காக இந்தப் பதிவு என்று விளங்கவில்லை.

பிங்குஸ்தான்

Friday, October 19, 2007

கடல் குதிரையும் சபிக்கப்பட்ட ஆண் ஜனமும்

வீட்டில் அக்கா உறங்கியதும் அனிமல் ப்ளானட் பார்ப்பது உண்டு. சமீபத்தில் நான் பார்த்த Most Extreme Mom's & Dad's(விலங்குகளில்) ஆச்சர்யப்பட வைத்த ஒன்று. விலங்கினங்களிலேயே குட்டியை வயிற்றில் சுமக்கும் ஆண் விலங்கு(மனிதனையும் சேர்த்துத்தான் - மனிதன் social animalலாமாம்) ஒன்றே ஒன்று தானாம். அதுதான் கடல் குதிரை, அதனால் Most extreme dad என்கிற பெருமை கடல் குதிரைக்குக் கிடைத்தது.

எங்கோ படித்த ஞாபகம் மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்தே பெண்களைக் கண்டு ஆண்கள் பயந்து வந்ததாக, எதனாலென்றால் பெண்ணால் மட்டும் தான் ஒரு உயிரினத்தை பிறப்பிக்க வைக்க முடிந்ததாகவும் அதனால் தான் அவன் பெண்களை தெய்வமாக வைக்க ஆரம்பித்தான் என்றும் எங்கே என்று நினைவில் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை இல்லாததால் இயற்கையின் மீது இந்த பழியை சுமத்துவதைத் தவிர வேறுவழியில்லை, ஆண்களிடம் இருந்து பிறப்பிக்கும் பாக்கியத்தை மறைத்துவிட்டதற்காக.

அறிவியல் உலகத்தின் அதிவளர்ச்சின் காரணத்தில் பிற்காலத்தில் ஆண்கள் குழந்தை பெற வைக்கும் சாத்தியம் நிறைவேறும் என்று நம்புவோம். கற்காலத்தில் இருந்த மனிதனால் இன்றைய சாட்டிலைட் உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது அதைப்போலவே இன்று நாமும் இருக்கிறோம் அறிவியல் உலகம் படைக்கப்போகும் ஆச்சர்யங்களில் இந்த ஆண் பிரசவிக்கும் அதிசயமும் ஒன்றாக இருக்கவேண்டும்.

Men's breasts do have milk ducts

Men's breasts do have milk ducts, and their bodies produce oxytocin and prolactin, the hormones required for milk production. As of yet, there are no proven scientific examples of male breastfeeding, but there are reports of men who were able to produce milk through extensive stimulation of the breast and nipple. Yet this isn't a viable option for feeding babies, especially as no one is certain if male breast milk would be of the same quality and composition as female milk.



கடல் குதிரையில் இருந்து டாபிக் எங்கேயோ ஹைஜாக் செய்யப்பட்டுவிட்டது. ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம் கடல்குதிரைகள் தான்(இந்த ஃபேமிலியும் இன்னும் சிலரையும் சொல்லலாம் - கடல் டிராகன் ஒரு உதாரணம்). நிறைய பேர் அனிமல் ப்ளானட்டின் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். Most extreme mom's ம் கூட ஒரு நல்ல நிகழ்ச்சி தான் நான் மறுக்கவில்லை; ஆனால் எனக்கு இயல்பாகவே மற்றையது பிடித்திருந்தது.

ஆண்களாலும் பிள்ளை பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டால் உலகம் எப்படியிருக்கும் நிச்சயமாய் ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதை எழுத முடியும். சைன்ஸ் பிக்ஷன் என்றதும் நினைவிற்கு வரும் சுஜாதா ஐயாவை என்னால் ஒரு தீவிரமான ஆணாதிக்கவாதி என்று சொல்லமுடிந்தாலும் அந்த வம்பை இங்கே இழுக்கவில்லை. அதேபோல் சமீபத்தில் ஒரு நபர் நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு குங்குமத்தில் 'பெண்களை சுலபமாக ஏமாற்ற முடியும்' என்பதை திரும்பவும் நிரூபித்திருக்கிறார் என்ற அவருடைய பதிலை தூக்கியெறிந்துவிட்டு மற்றொரு கேள்வியான பெண்கள் இல்லாத உலகம் பற்றிய கேள்விக்கான பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

அவர் சொல்லியிருந்த பதில் எவ்வளவு காலம் அப்படியிருக்க முடியும் ஒரு நூற்றாண்டுக்குள் உலகம் மடிந்துபோய்விடும்(Exact ஆன வரிகள் கிடையாது நினைவில் இருந்து சொல்கிறேன்) என்று சொன்னார். ஆனால் அறிவியல் இந்த அதிசயத்தைச் சாதித்தால் ஒருவேளை அந்த நபர் கேட்டிருந்த கேள்விக்கான பதிலாக சுஜாதா மற்றொன்றை சொல்லியிருப்பார் என்று நம்பலாம்.

ஆனால் உயிரினங்களில் சில அரியவகை உயிரினங்கள் அழியும் பொழுதே அவற்றைக் காப்பாற்ற பெரிய இயக்கங்கள் வரும்பொழுது இத்தனை நூற்றாண்டுகளாய் உலக இயக்கத்திற்கு வழி செய்த பெண்களை ஒழித்துவிடுவதும் கூட சைன்ஸ் பிக்ஷனிலேயே சாத்தியமாகலாம்.

பிங்குஸ்தான்

Friday, October 12, 2007

ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும் சோகம்

அடித்துச் சாத்திய கதவின் ஒலியலைகள்
மிதந்தபடி சொல்லிச் செல்கிறது
முன்னம் சாத்தப்பட்ட தருணங்களை
வார்த்தைகளின் தேவையில்லை உனக்கு
எனக்கும் கூடத்தான்
உன் நிராகரிப்பின் என் வெறுமை
வார்த்தைகளைத் தொக்கி நிற்பதில்லை

காலம் இன்னிசையோடு அள்ளித் தெறித்து
வரைந்து செல்லும் ஓவியத்தினுள்
தூக்கத்தை தொலைத்தபடி
நம் பிம்பங்களுக்குள் கரைந்து போகிறேன்
உன் இருப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும்
மன்னிப்பின் சாத்தியக்கூறுகளையும்
ஒன்றாய்ப் புறக்கணித்தபடி

இன்னொரு நாளுக்கான தேவையில்லை
உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை
உன்னிடம் கொட்டிக் கவிழ்க்க
ப்ரார்த்தனைகளுடனே தொடர்கிறேன்
ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும்
உன் பிரிவின் சோகம்
வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படவேண்டி

புனைவின் நீளமாய் நம்மிடையே சுவர்
விளிம்பளவு ஏறியபின்னும்
தோல்வியின் சுவடறிந்து தவிர்த்துவிடுகிறேன்
நாம் பிரியும் சாத்தியக்கூறுகளை
முன்பொருமுறை மறுத்தளித்ததைப் போல்
உபயோகமில்லாத உன் முகவரியைப் போல்

----------------------------------------------------

இதை Backstreet Boysன் லேட்டஸ்ட் வெளியீடான Inconsolable ன் தாக்கத்தில் எழுதியது. தாக்கம் தெரிகிறதா? இன்னும் பிரகாசமாக இதில் தெரியும் என்று நினைக்கிறேன். இது தான் முதல் முறை மனதில் தோன்றியதை அப்படியே எழுதியது. மேலேயிருப்பது மாற்றங்களுக்கு உள்ளானது.

எத்தனையோமுறை சாத்திய நினைவுகளை
மீண்டும் எழுப்பியது இன்று இன்னுமொறுமுறை சாத்தப்பட்ட கதவு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நீ என்னைப் பிரிந்த பிறகான வெறுமையால்
வெட்டி எறியப்பட்ட காட்சியொன்றின் நிராகரிப்பின் வலியை நான் உணர்கிறேன்

உறங்க நினைக்கும் என்னை மீட்டெழுப்புகிறது காலம்
உன்னுடனான என் நினைவுகளை இசைத்தபடி
ஆயிரக்கணக்கான என் தவறுகளுக்கான மன்னிப்பை
உணர்ந்திருக்கும் இன்று, கேட்டிருப்பேன்
நிச்சயம் நீ இருந்திருந்தால்

உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை
உன்னிடம் கொட்ட
இன்னொரு நாளுக்கான பொறுமையில்லை என்னிடம்
உன்னைப் பிரிந்ததும் ஆறுதலடையவே முடியாதவனாகிற சோகம்
உன்னிடம் வார்த்தைகளாகி சரணடையவேண்டும்
என்ற ப்ரார்த்தனையுடன் நான்

நமக்கிடையேயான சுவரின் விளிம்பளவு ஏறிவிட்டாலும்
தோல்வியினால் விழப்போகும் உயரமறிந்து
இயலாமல் போய்விடுகிறது என் முயற்சிகள்
தெரிந்தேயிருக்கும் உன் முகவரியின் தேவையைப்போல
எல்லா சமயங்களிலும் நீ என்னுடன் இருந்துவிடுவாய் என்ற நம்பிக்கையைப் போல

---------- உண்மையான வரிகள் ------------

I close the door
Like so many times, so many times before
Felt like a scene on the cutting room floor
When I let you walk away tonight
Without a word

I try to sleep, yeah
But the clock is stuck on thoughts of you and me
A thousand more regrets unraveling, ohh
If you were here right now, I swear,
I'd tell you this

CHORUS:
Baby I don't want to waste another day
Keeping it inside it's killing me
Cause all i ever want, it comes right down to you (to you)
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable

I climb the walls
I can see the edge but I can't take the fall, no.
I've memorized the number
So why can't I make the call?
Maybe 'cause I know you'll always be with me
In the possibility

CHORUS:
Baby I don't want to waste another day
Keeping it inside it's killing me
Cause all I ever want, it comes right down to you
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable

I don't want to be like this,
I just want to let you know,
Everything that I'm holding,
Is everything I can't let go, can't let go.

CHORUS:
Baby I don't want to waste another day
Keeping it inside it's killing me
Cause all I ever want, it comes right down to you
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable

Don't you know it baby
I don't want to waste another day

I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable

------------------------------------------------------------------

இன்னொரு ஓவியம்...(பெரிதாய்ப் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்...)

பிங்குஸ்தான்

Thursday, October 11, 2007

ஆஸ்திரேலிய அணியைக் கண்டிக்கிறேன்





பச்சைப் புள்ளைங்களை எவ்வளவு நேரம் நீங்களும் இழுத்துப் போட்டு அடிப்பீங்க. போதும் இத்தோட நிறுத்திக்குவோம். வடிவேலு கணக்கா அழுதுடப் போறாங்க...

Go Aussie Go!!!

பிங்குஸ்தான்

Wednesday, October 10, 2007

இராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு

சில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I will turn entire Korean Peninsula into ashes போன்ற வார்த்தைகள் மகிழ்ச்சியளித்துக் கொண்டுதான் இருந்தன. அதே போல் தான் இந்தியாவின் மீது பாகிஸ்தான் அணுஆயுதப் பிரயோகம் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என்ற வார்த்தைகளும். ஆனால் இன்று சாம்பலாக்குவதில் அத்தனை விருப்பம் இல்லை. ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று அடிக்கப்படும் ஜல்லிகளால் இந்தப் பதிவு எழுதப்படவேண்டிய ஆர்வம் எழுந்தது.

இந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய கடற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.

முதன் முதலில் இந்திய அரசன் ஒருவன், இந்தியாவிற்கு வெளியே பெரும்படையுடன் படையெடுத்தான் என்றால் அது இராஜேந்திரன் தான். இராஜேந்திரனுடைய காலம் தான் விஜயாலய சோழன் உருவாக்கிய சோழப்பேரரசின் பொற்காலம். இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை(தற்போதைய ஜெயங்கொண்டம் பகுதி) தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். இதனுடன் ஒப்பிட்டால் விஜயாலன் தொடங்கி இராஜராஜ சோழன் வரையான மன்னர்கள் 150 ஆண்டுகள் தான் தஞ்சையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்(தஞ்சை முன்னர் இருந்து வந்தது என்றாலும் விஜயாலனுக்குப் பிறகே பெரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.) ஆனால் இன்று இராஜேந்திர சோழன் தொடங்கி இராஜாதிராஜ சோழன், இராஜேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராஜராஜ சோழன் II, இராஜாதிராஜ சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராஜராஜ சோழன் III என பதினோரு மன்னர்கள் ஆண்ட அரண்மனை மண்மேடாக இருக்கிறது. :(


மாளிகைமேடு தற்போது




சுற்றுப்பட்டு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்


கிடைத்த கல்வெட்டு ஒன்று - காலம் கிபி 1100


மாளிகைமேட்டைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் குறிப்பு

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 1980 களில் ஜெயங்கொண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு இப்பொழுது மாளிகைபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் இராஜேந்திரன் வழிவந்த சோழர்களின் அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அகழ்வாராய்ச்சியை தொடரலாம் நிறுத்திவிட்டார்கள். தற்பொழுது ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான(ஆய்வெல்லாம் முன்னமே செய்துவிட்டார்களாம்! இப்ப ரோடு ரொம்ப சீரியஸா போடுறாங்க)முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னம் அரண்மனையும் ஏரியும் இருந்த இடத்தில் ஏதும் ஆராய்ச்சி செய்வார்களா இல்லை அப்படியே விட்டுவிட்டு பழப்பு நிலக்கரி எடுக்கத்தொடங்குவார்களா தெரியவில்லை.

மாளிகைமேடு(மாளிகைபுரம்) என்றழைக்கப்படும் இராஜேந்திரனின் அரண்மனையில் இருந்து கோவிலுக்கு சென்று வர சுரங்கவழியொன்று இருந்ததாகவும் சொல்கிறார்கள். அரண்மனை அகழ்வாராய்ச்சியின் பொழுது கரும்குழவிகள் வந்ததால் பாதையை மண்போட்டு மூடிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவை கட்டுக்கதைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு, திருச்சி மலைக்கோட்டையில் இருந்து மலைக்கோவிலுக்கு(திருவெறும்பூர்) கூட சுரங்கவழியுண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பகுதியின் எங்கு தோண்டினாலும் சிலைகளும் கல்வெட்டுக்களும்(!!!) கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் செலவிட்டு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.

இனி இராஜேந்திர சோழன் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் என்று நான் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவற்றை கீழே தொகுக்கிறேன். இராஜேந்திர சோழன் பற்றி எழுத உதவியது ஆங்கில விக்கிபீடியா; கங்கைகொண்ட சோழபுரம் சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி துணை கொண்டு எழுதியது. இறுதியில் நான் சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

இணை அரசனாக நிர்வகித்தல்

இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.

முடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும்

இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

படையெடுப்பு - தொடக்க காலம்
சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.

ஈழத்தின் மீதான படையெடுப்பு
முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக] கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மிது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் '''மஹிந்தா V''' பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.

பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு

ஈழப்படையெடுப்பைத தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.

இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.

சாளுக்கிய படையெடுப்பு

இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும், பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.

இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.

கங்கையை நோக்கிய படையெடுப்பு
மேலை கீளைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புக்கள்

இராஜேந்திரனின் 14-ம் ஆண்டு ஆட்சிக்காலத்திற்கு முன் கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும், ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.

ஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுவரம். விளைவுகளில் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம், விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன், படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.

மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.

மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.

விமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.

இது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு "சைத்தியங்கள்" பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.

தேவிக்கு தனிக்கோயில்

இது தவிர, அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும், கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில், அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.

சோழர் கலையின் இறுதிக் காலத்திற்கு முன்னான, சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியை, தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாக, தேவியை(அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது 'திருகாமக் கோட்டம்' என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.

கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம், கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், அவன் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.

முதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில்(தென் ஆற்காடு மாவட்டம்)ஏற்பட்ட கல்வெட்டு, உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிர, ஸ்ரீபட்டாரகியர்(பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.

பிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.

அது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவகாம சுந்தரி கோயிலை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் 'சுற்றாலை வளைவும்' செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.

























பிங்குஸ்தான்